இணையம் இரண்டு முகங்களை கொண்டது. நமக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் உடனடியாக தருவது ஒரு முகம். ஆபாசம், ஹேக்கிங், ஸ்பாம் என்று வக்கிரங்களை காட்டுவது மற்றொரு முகம். சமீபத்தில் இந்தியாவில் இணையக் குற்றங்களை பற்றி இணையப் பாதுகாப்பு நிறுவனமான நார்டன் வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துவோரில் 48 சதவீதம் பேர் சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் 11.3 கோடி மக்கள் சராசரியாக 16,000 ரூபாயை இணையத் திருடர்களிடம் இழக்கிறார்கள் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இது சர்வதேச அளவில் சராசரியாக ரூ. 23,878 ஆக உள்ளது. அப்பாடா நம்மைவிட மற்றவர்கள் கூடுதலாக இழக்கிறார்கள் என்று ஆறுதல்பட்டுக் கொள்ள வேண்டியதுதான். பொதுவாக சைபர் கிரைம் தொடர்பான குற்றங்களில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் இணையத்தில் பணபரிமாற்றங்கள் நடக்கும்பொழுது, கடவுச்சொல் (பாஸ்வேர்டு) உள்பட கணக்கு விவரங்களைத் திருடுவது , பெண்களுக்கு எதிராக பாலியல் தொல்லைகள் கொடுப்பது, ஆபாச படங்களை வெளியிடுவது போன்றவைதான் தற்போது பெருகி வருகின்றன. 54 சதவீதம் பேர் தங்களுக்கு தெரியாமலேயே கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு தகவல்கள் ஆன்லைனில் திருடப்படுகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர். 40 சதவீதத்தினர் மட்டுமே சைபர் கிரைம் குற்றம் நடந்தால் என்ன செய்வது என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். 60 சதவீதத்தினர் ஆன்லைன் குற்றங்கள் குறித்த அச்சத்தில் உள்ளனர். 17 நாடுகளில் 17,125 நபர்களிடம் இந்த ஆய்வு செய்யப்பட்டது. இந்தியாவில் 1,000 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உலகிலேயே இணையத்தை பயன்படுத்துவதில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்ல வேண்டிய இணையம் தற்போது அழிவுப் பாதைக்குச் அழைத்துச் செல்கிறது என்பதைத்தான் தற்போது வெளியாகியுள்ள அறிக்கை காட்டுகிறது. 1980களுக்குப் பிறகு பிறந்தவர்களில் 31 சதவீதம் நபர்கள் தங்களது கடவுச்சொல்லை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
பாஸ்வேர்டுகளை பயன்படுத்தும் போது 8 எழுத்துகள், நம்பர், அடையாளங்களை 41 சதவீதம் பேர் மட்டுமே சரியாக பாதுகாப்பாக பயன்படுத்துகிறார்கள். இப்படி அடிப்படை பாதுகாப்புகளையே சரியாக செய்யாததன் விளைவுதான் இந்த இணையக் குற்றங்கள் அதிகமானதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. என்ன நடக்கிறது என்று கூடத் தெரியாமல் குற்றங்களில் ஈடுபடுவதால் பெரும்பாலானோர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இணைய பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. எதற்காக சுய விவரங்களை கேட்கிறார்கள் என்பது கூடத் தெரியாமல் விறுவிறுவென நம்மை பற்றிய அனைத்து தகவல்களையும் கொடுத்து விடுகிறோம். இந்த தகவல்கள் யாரோ ஒருவரால் திருடப்படுகிறது என்பது நம்மில் பல பேருக்கு தெரிவதில்லை. இதனுடன் பணத்தையும் இழப்பதுதான் பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது. இணையத் திருடர்களை பற்றி புகார் அளிக்கவும் சிலர் தயங்குகிறார்கள்.
போதுமான விழிப்புணர்வு இணையப் பயன்பாட்டளர்களிடம் இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. நமது தகவல்களை குறைந்தபட்சம் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருந்தாலே இந்த பிரச்சினையிலிருந்து எளிதாக விடுபடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக