அரசு ஊழியர்களை வஞ்சிக்கும் தமிழகபட்ஜெட் - 2017 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

அரசு ஊழியர்களை வஞ்சிக்கும் தமிழகபட்ஜெட் - 2017

🌻அரசு ஊழியர் சங்கம் விமர்சனம் !!

🌻தமிழக அரசு 2017 – 18 ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஜெயக்குமார் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் அரசு ஊழியர்களை வஞ்சிப்பதாக இருக்கிறது என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் குற்றஞ்சாட்டியிருக்கிறது. இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சக்கத்தின் சார்பாக அதன் மாநிலத்தலைவர்
மு.சுப்பிரமணியன் மற்றும் மாநில பொதுச்செயலாளர் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

*வஞ்சிக்கும் போக்கு கிஞ்சித்தும் மாறவில்லை*!                     
🌻என்னதான் அரசு ஊழியர்கள் தாங்கள் பணி செய்யும் அரசாங்கத்திற்கு எஜமான விசுவாசத்தோடு உழைத்தாலும், எந்த அரசாக இருந்தாலும் அவை தம் ஊழியர்களை நடத்தும் அடிமைத்தனப் போக்கு மாறாது என்பதற்கான இன்னொரு ஆதாரம் தான் 2017-18ம் ஆண்டிக்கான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை.

🌻மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மாற்றி அமைக்கப்பட்டுள்ள பின்னணியில் தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் ஊதியத்தை மாற்றி அமைத்திடும் பணியை மேற்கொள்ள தமிழக அரசால் ஐந்து நபர் அடங்கிய அலுவலர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

🌻ஆனால் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து இந்த நிதி நிலை அறிக்கையில் பொத்தாம் பொதுவாக கூறப்பட்டுள்ளதே தவிர குறிப்பான நிதி எதுவும் வரையறுக்கப்படவில்லை என்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

*சரித்திரத்தின் தரித்திர சுழற்சி?*

*சென்ற முறை தமிழக அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்ட ஊதிய மாற்றத்தில் ஓராண்டு நிலுவைத் தொகை மறுக்கப்பட்டது.

🌻 அது 1.1.2006 முதல் கருத்தியல் ரீதியாகவும், 1.1.2007 முதல் பணப்பலனுடனும் அமல்படுத்தப்பட்டது என்பதையும் ஏற்கெனவே அரசின் கவனத்திற்கு பலமுறை அரசு ஊழியர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் கொண்டு சென்று நிலுவைத் தொகையினை கேட்டபோது அப்போது அரசுத்தரப்பில், அடுத்த ஊதிய மாற்றத்தில் காலதாமதமோ, கருத்தியல் ரீதியான கணக்கீடுகளோ இல்லாமல் அலுவலர் குழுவின் பரிந்துரைகள் உடனடியாக அமல் படுத்தப்படும் என்றும்,

🌻பிந்தைய ஆண்டுகளில் தவணைத்தொகை வழங்க வேண்டிய அவசியம் இருக்காது என்ற உறுதிமொழியும் வழங்கப்பட்டது.

🌻 இந்த நிதிநிலை அறிக்கையை நோக்கும்போது அந்த உறுதிமொழி காற்றில் பறக்கவிடப்பட்டுவிட்டது என்பது நிதர்சனமாகத் தெரிகிறது. ஊதிய மாற்றத்திற்கு கண்டிப்பாக ஒரு கணிசமான தொகை தேவைப்படும் என்பது அரசுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

🌻 ஆனால் அரசு அதை லாவகமாகத் தவிர்த்திருப்பதைப் பார்க்கும்போது 2006 ஊதிய மாற்றம் 2007ம் ஆண்டில் பணப்பலனுடன் அமல்படுத்தபட்ட சரித்திரம் மீண்டும் ஒருமுறை தரித்திர சுழற்சி செய்கிறதோ என்ற ஐயப்பாடு எழுகிறது.*

🌻விதி எண்.110ல் சதி என்னும் 111
சென்ற ஊதிய மாற்றத்தின்போது நிகழ்ந்த தாமதங்களையும் முரண்களையும் முதல்வரும், நிதியமைச்சரும் ஒப்புக்கொண்டு இனி அமைக்கப்படும் ஊதிய மாற்றத்திற்கான அலுவலர் குழுவின் பரிந்துரைகள் காலதாமதப்படுத்தாமல் வழங்கப்படவும், அரசாணைகள் முரண்பாடுகள் இல்லாமல் வெளியிடப்படவும் தவணைகளில் நிலுவைத்தொகை வழங்கவேண்டிய சூழ்நிலை எழாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பேரவையில் பட்ஜெட் வரவு செலவு திட்ட உரையிலும் (13-02-2016), தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண்.110ன் கீழான அறிக்கையிலும் (19-02-2016) தெரிவித்தனர்.

🌻 ஆனால் இந்த நிதிநிலை அறிக்கையை பார்க்கும்போது அவை வெறும் சம்பிரதாய சப்பைக்கட்டுகள் என்பதும் விதி எண்.110ல் வெளியிடப்படும் அறிவிப்புகள் அனைத்தும் சதிகளின் தொகுப்பே என்பதும் தீர்க்கமாகியுள்ளது.

*காரிய சித்தியா?* *கழுத்தறுக்கும் யுக்தியா?*

🌻மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது ’’அதிமுக அரசு அமைத்தால் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படும்’’ என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார்.

🌻 அந்த ஆண்டில் அதிமுக அரசமைத்தும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாத நிலையில் தமிழ்நாடு அரசுஊழியர் சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் போராட்டம் நடத்தினோம்,

🌻 இறுதியில் ஆட்சியின் ஐந்தாண்டுகள் முடியும் தறுவாயில் கடந்த 19.02.2016ஆம் தேதி ஜெயலலிதா அவர்கள் தமிழக சட்டப்பேரவையில் விதி எண்,110ன் கீழ் அறிக்கை வெளியிட்டு அதில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதி திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரை அளிக்க  சாந்தா ஷீலா நாயர் ஐ.ஏ.எஸ். அவர்கள் தலைமையில் ஒரு வல்லுநர் குழு அமைத்து அது மூன்று மாத காலத்திற்குள் அறிக்கை அளிக்கும் படியும் வல்லுநர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தக்க முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

🌻 ஆனால் அந்த வல்லுநர் குழுவின் காலவரையானது இதுவரை நான்குமுறை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தற்போது இது 25-03-2017 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது இது பழைய பென்சன் திட்டத்தை உண்மையில் கொண்டு வருவதற்கான காரிய சித்தியா? அல்லது காலவிரயம் செய்து அரசு ஊழியர்களின் கழுத்தறுக்கும் யுக்தியா? என்கிற சந்தேகமும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

🌻 இதுபற்றியும் இந்த நிதிநிலை அறிக்கையில் எவ்வித அறிவிப்பும் இல்லை,

*மறுக்கப்பட்டுள்ள இடைக்கால நிவாரண நிதி*,                                    இழைக்கப்பட்டுள்ள இன்னொரு அநீதி!*

🌻மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் 1.1.2016 முதல் அறிவிக்கப்பட்டு அவர்கள் அதற்கான புதிய ஊதிய மாற்றங்களையும், புதிய ஊதிய மாற்றத்திற்கான நிலுவைத் தொகைகளையும் பெற்றுவிட்ட நிலையில் தமிழக அரசு ஊதிய மாற்றத்திற்கான அலுவலர் குழுவை 22.2.2017ம் தேதி அதாவது 14 மாத கால தாமதத்தில் அமைத்துள்ளது.

🌻 அலுவலர் குழு தன்னுடைய பரிந்துரைகளை அளிக்க 4 மாதங்கள் காலவரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அது பரிந்துரைகள் வழங்கிய பின்னர் அரசு, அரசாணைகள் வெளியிட குறைந்த பட்சம் கூடுதலாக ஒரு மாதகாலம் தேவைப்படலாம். அப்படி ஒரு நிலை வந்தால் முழு நிலுவைத் தொகையையும் ஊழியர்களுக்கு ஒரே நேரத்தில் கொடுப்பதில் அரசுக்கு நிதிச்சுமை ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக 01.01.2016 முதல் 20 சதவீத ஊதியத்தை வழங்கிட வேண்டும் எனவும் கேட்டிருந்தோம்.

🌻 இந்த பட்ஜெட் உரையில் இது பற்றிய அறிவிப்பும் எதுவும் காணக்கிடைக்கவில்லை. இதன்மூலம் தமிழக அரசு ஊழியர்களின் வாழ்வாதாரக் குரல்வளை நெறிக்கப்பட்டுள்ளது.

🌻காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தவிர வேறு வழியில்லை!
ஆக, அரசு ஊழியர்களின் எந்த கோரிக்கையும் குறிப்பாக நிதி சார்ந்த கோரிக்கைகள் எதுவும், அவை ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தாலும், ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும், வாக்குறுதி அளிக்கப் பட்டிருந்தாலும் அல்லது அறிவிப்புகளே (விதி எண்,110) கூட வெளியிடப்பட்டிருந்தாலும் எதையும் இந்த அரசு நிறைவேற்ற முன்வரப்போவதில்லை என்பது இந்த நிதிநிலை அறிக்கையில் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.

🌻 எதற்கெடு த்தாலும் நிதியில்லை, எப்போது கேட்டாலும் கஜானாவில் பணமில்லை என்ற பதில்கள்தான் அரசிடமிருந்து வருகிறது.

🌻அறிவிப்புகள் வெறும் காகிதங்களாக இருப்பதும், அறிவிப்புகளுக்குள் நம்பிக்கை துரோக நயவஞ்சகங்கள் ஒளிந்திருப்பதும், அரசு ஊழியர்கள் இந்த அரசாங்கத்திடமிருந்து தொடர்ந்து கண்டுவரும் காட்சிகளாகும். எவ்வளவுதான் போராடினாலும், பொறுமை காத்தாலும் அரசு ஊழியர்களை வஞ்சிக்கும் போக்கு கிஞ்சித்தும் மாறவில்லை

🌻 அரசுக்கு. அரசு ஊழியர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு அந்த எல்லை எதுவென்று அரசுக்கு புரிய வைக்கும் நேரம் வந்துவிட்டது. பூஜ்ஜியத்திற்குள்ளே ஒரு ராஜ்ஜியம் நடப்பதும் அந்த ராஜ்ஜியத்தை நம்பி அரசு ஊழியர்கள் இனியும் காத்திருப்பதும் வீணே.

🌻எனவே அரசு ஊழியர் சங்கம் ஏற்கெனவே அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டதை அதிதீவிரமாக முன்னெடுக்க வேண்டிய அவசர அவசியம் எழுந்துள்ளது.

🌻 அதனால், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தலைமையில் உள்ள 64 துறைவாரிச் சங்கங்கள் ஒன்றிணைந்து மேற்கொள்ளும். 08-04-2017 அன்று மாவட்டத் தலைநகரங்களில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடும், 15-04-2017 அன்று திருச்சி நகரில் மாநில அளவிலான போராட்ட ஆயத்த மாநாடும் , 25-04-2017 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டமும் நடைபெறும்.

🌻இந்த போராட்டம்  அரசின் பிடிவாத இரும்புக் கதவுகளை உடைத்தெறிந்து, தடுக்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் மீட்டெடுக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here