இந்தியாவில் விளம்பரங்களுக்கான செலவுகள் இந்த ஆண்டில் 13.2 சதவிகித உயர்வுடன் ரூ.69,347 கோடியாக இருக்கும் என்று ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
மீடியா ஏஜென்சி நிறுவனமான குரூப்-எம், ‘திஸ் இயர் நெக்ஸ்ட் இயர்’ என்ற தலைப்பில் இந்தியாவின் விளம்பரங்களுக்கான செலவுகள் குறித்த ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘இந்தியாவில் விளையாட்டு மற்றும் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகள் பிரபலமாக இருப்பதால் தொலைக்காட்சி வாயிலான விளம்பரங்கள் சிறப்பான வளர்ச்சியைக் கொண்டிருக்கும். அதன்படி 2018ஆம் ஆண்டில் விளம்பரங்களுக்கான செலவுகள் 13.2 சதவிகித உயர்வுடன் ரூ.69,347 கோடியாக இருக்கும். அதிகபட்சமாக டிஜிட்டல் விளம்பரங்களுக்கான செலவுகள் 30 சதவிகித உயர்வுடன் ரூ.12,337 கோடியை எட்டும். எனினும், அச்சு ஊடக விளம்பரங்களுக்கான செலவுகள் மிக மந்தமாக 4 சதவிகித வளர்ச்சியை மட்டுமே கொண்டிருக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டைப் பொறுத்தவரையில், விளம்பரங்களுக்கான செலவுகள் 14.2 சதவிகித உயர்வுடன் ரூ.79,165 கோடியாக இருக்கும் என்று இந்த ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாகத் தொலைக்காட்சி 45.6 சதவிகிதமும், செய்தித்தாள் 23.7 சதவிகிதமும், இணையம் 20.3 சதவிகிதமும் பங்களிப்பைக் கொண்டிருக்கும் என்று குரூப்-எம் நிறுவனம் தனது ஆய்வில் கணித்துள்ளது. முன்னதாக மேக்னா நிறுவனம் வெளியிட்டிருந்த டிஜிட்டல் விளம்பரங்களுக்கான ஆய்வறிக்கையில், 2018ஆம் ஆண்டில் இந்தியாவின் டிஜிட்டல் விளம்பரங்களுக்கான செலவுகள் 12.5 சதவிகித உயர்வுடன் ரூ.68,000 கோடியைத் தாண்டும் என்று மதிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக