பதவி பறிப்பு செல்லும்- தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி!
பதவி பறிப்பு செல்லாது - நீதிபதி சுந்தர்!
3வது நீதிபதிக்கு பரிந்துரை! விரைவில் 3வது நியமனம்!
18 தொகுதிக்கு தேர்தல் நடத்தக்கூடாது!
இன்னும் சில மாதங்களுக்கு அதிமுக அரசுக்கு ஆபத்தில்லை என வல்லுனர்கள் கருத்து!
இன்று (ஜூன் 14) இரு நீதிபதிகளும் இருவேறு தீர்ப்புகளை வழங்கியிருப்பதால் ஏற்கனவே குழப்பமான இந்த வழக்கு மேலும் குழப்பத்தை எட்டியுள்ளது.
கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து ஆளுநர் மாளிகையில் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை’ என்று கடிதம் கொடுத்தனர். இதை வெளியே வந்தும் அறிவித்தனர்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி, சபாநாயகர் தனபால் சார்பில் சட்டப்பேரவை செயலாளர் பூபதி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்திய அரசமைப்புச் சட்டம், பத்தாவது அட்டவணையின்படி ஏற்படுத்தப்பட்டுள்ள 1986-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களின் (கட்சி மாறுதல் காரணம் கொண்டு தகுதியின்மையாக்குதல்) விதிகளின் கீழ், பேரவைத் தலைவர், கீழ்க்காணும் சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களை 18.9.2017 முதல் தகுதி நீக்கம் செய்து ஆணையிட்டதன் காரணமாக, தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்துவிட்டார்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தங்க தமிழ்ச்செல்வன் - ஆண்டிபட்டி தொகுதி, ஆர்.முருகன் - அரூர், மாரியப்பன் கென்னடி - மானாமதுரை, கதிர்காமு - பெரியகுளம், ஜெயந்தி பத்மநாபன் - குடியாத்தம், பழனியப்பன் - பாப்பிரெட்டி பட்டி, செந்தில் பாலாஜி - அரவக்குறிச்சி, எஸ். முத்தையா - பரமக்குடி, வெற்றிவேல் - பெரம்பூர், என்.ஜி.பார்த்திபன் - சோளிங்கர், கோதண்டபாணி - திருப்போரூர், ஏழுமலை - பூந்தமல்லி, ரெங்கசாமி - தஞ்சாவூர், தங்கதுரை - நிலக்கோட்டை, ஆர்.பாலசுப்பிரமணி - ஆம்பூர், எஸ்.ஜி.சுப்ரமணியன் - சாத்தூர், ஆர்.சுந்தரராஜ் - ஒட்டப்பிடாரம், கே.உமா மகேஸ்வரி - விளாத்திகுளம் ஆகிய 18 எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஜனவரி 23 ஆம் தேதி முழு விசாரணை முடிந்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பை இன்று மதியம் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தரும் வழங்குவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. தீர்ப்பு வழங்கப்படுவதை ஒட்டி உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் குவிந்திருந்தனர்.
சுமார் பத்து மாதங்களாக 18 எம்.எல்.ஏ.க்களும் பதவியில் இல்லாத சூழல் நிலவிய நிலையில், இன்று இந்த வழக்கின் தீர்ப்பை வழங்க தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் நீதிமன்றத்துக்கு மதியம் ஒரு மணியளவில் வந்தனர். 18 பேர் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்புக்கு முன் ஆறு வழக்கின் தீர்ப்புகளை வழங்கிய நீதிபதிகள் ஏழாவதாக இவ்வழக்கின் தீர்ப்பை இன்று மதியம் 1.40-க்கு வழங்கத் தொடங்கினார்கள்.
இரு நீதிபதிகளும் தனித்தனியாக தங்களது தீர்ப்பை வழங்கினார்கள்.
முதலில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார். அதில், “18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டது செல்லும்’’ என்று தீர்ப்பளித்தார்.
அதேநேரம் நீதிபதி சுந்தர், “சபாநாயகர் தனபால் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது’’ என்று மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக