'பிளஸ் 2 மாணவர்களுக்கு, 75 இடங்களில், சி.ஏ., தேர்வுக்கான இலவச பயிற்சி அளிக்கப்படும்,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.
தென்னிந்திய பட்டய கணக்காளர்களின், ஆறாவது மெட்ரோ மாநாடு, சென்னையில், நேற்று நடந்தது. இதில், அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக் கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.நிகழ்ச்சிக்கு பின், அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:
பிளஸ் -1, பிளஸ் -2 வகுப்புகளில், மொழி தேர்வுகளில், இதுவரை, 2 தாள்கள் இடம்பெற்றன. இப்போது, ஒவ்வொரு பாடத்துக்கும், ஒரே தாளாக மாற்றப்பட்டுள்ளது.
இதை, ஆசிரியர்கள் வரவேற்று உள்ளனர். பள்ளி படிப்பை முடித்தவுடன், எதிர்காலத்தில் மாணவர்கள் சிறந்து விளங்க, பள்ளிக் கல்வித் துறை, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
அதன்படி, மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில், 15 வகையான, புதிய பாடப்பிரிவுகள் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.
அனைத்து மாவட்டங்களிலும், நடமாடும் நுாலகம் அமைக்க உள்ளோம். இதன் வாயிலாக, சிறந்த கல்வியாளர்களாக, மாணவர்களை உருவாக்க முடியும்.
மாணவர்களின் ஆங்கில திறனை வளர்ப்பதற்காக, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சிறந்த பயிற்சியாளர்கள், ஆங்கில பயிற்சி அளிக்க உள்ளனர்.மாணவர்களின் மன அழுத்தங்களை குறைப்பதற்காக, எப்போது தேர்வு நடக்கும்; எப்போது முடிவுகள் வெளியாகும் என, முன்கூட்டியே தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு நடந்த, 'நீட்' தேர்வில், அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளின், 1,412 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மதிப்பெண் வேறு, தேர்ச்சி வேறு என்பதால், அதிக மதிப்பெண் பெறும் வகையில், நீட் தேர்வுக்கு, கூடுதல் நாட்கள் பயிற்சி அளிக்க உள்ளோம்.
நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, அரசின் பயிற்சி மையத்தில், நான்கு மாதங்கள் மட்டுமே, பயிற்சி அளிக்கப்பட்டது. அடுத்த மாதம் முதல், 412 அரசு மையங்களிலும், நீட் பயிற்சி துவங்கப்படும்.
மேலும், அரசின் சார்பில், 14 மாவட்டங்களில், 75 இடங்களில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, சி.ஏ., என்ற, தணிக்கையாளர் படிப்பு தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த பயிற்சி, இன்னும், 25 நாட்களில் துவங்கும். 10 ஆயிரம் பேர், இந்த பயிற்சியில் பயன் பெறுவர்.இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக