!
வடகொரிய அதிபர் கிம் ஜோங் வுன் உடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இது வரலாற்றில் முக்கிய நிகழ்வு என்று மகிழ்ச்சி தெரிவித்தார். வடகொரியா அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கை ஒப்புக்கொண்டதால், தென்கொரியா உடனான கூட்டு ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா நிறுத்திக்கொள்ளும் என அவர் அறிவித்தார்.
சிங்கப்பூர் சென்டோசா தீவிலுள்ள கெபல்லா ஹோட்டலில், நேற்று (ஜூன் 12) வடகொரிய அதிபர் கிம் ஜோங் வுன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பு நிகழ்ந்தது. முதலில் இருவரும் தனியாகச் சந்தித்துப் பேசினர். இதனைத் தொடர்ந்து, இரு நாட்டு அதிகாரிகளும் கலந்துகொண்ட அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதன்பின்னர், கிம் ஜோங் வுன்னும் ட்ரம்பும் இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்தச் சந்திப்பை முடித்துக்கொண்டு, நேற்று உடனடியாக அமெரிக்கா சென்றார் ட்ரம்ப். அதற்கு முன்னதாக, அவர் சர்வதேசச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “என்னைப் பொறுத்தவரை, உலக வரலாற்றில் இந்தச் சந்திப்பு ஒரு முக்கிய நிகழ்வு” என்று அவர் குறிப்பிட்டார். கிம் ஜோங் வுன் புத்திசாலித்தனம் மிகுந்தவர் என்றும், இளம் வயதிலேயே ஒரு நாட்டை ஆட்சி செய்கிறார் என்றும் புகழாரம் சூட்டினார். அந்நாட்டில் அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ளப்படுமென கிம் உறுதியளித்ததாகவும் கூறினார்.
“கிம் உடனான சந்திப்பு நேர்மையானதாக, ஆக்கபூர்வமானதாக இருந்தது. வடகொரியா அணு ஆயுதங்களைக் கைவிட்டால், அந்நாடு பெறும் விஷயங்களுக்கு எல்லையே இல்லை. உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள் வடகொரியாவுடன் இணைந்து செயல்படவே விரும்புகின்றன. இந்த சந்திப்புக்குப் பிறகு, தென்கொரியாவுடனான கூட்டு ராணுவப் பயிற்சிகளை அமெரிக்கா நிறுத்திக்கொள்ளும்” என்று தெரிவித்தார் ட்ரம்ப். அது மட்டுமல்லாமல், தென்கொரியாவுடனான ராணுவப் பயிற்சிக்கு நிறைய பணம் செலவாகதாகவும் கூறினார்.
கிம்மைச் சந்தித்த சில நொடிகளிலேயே, இந்தச் சந்திப்பு பயனுள்ளதாக அமையுமெனத் தனக்குத் தோன்றியதாகக் குறிப்பிட்டார் ட்ரம்ப். “முதல் நொடியிலேயே உங்களுக்குத் தெரிந்துவிடும். சில நேரங்களில் அது வேலை செய்யாவிட்டாலும், சில நேரம் அது உண்மையாகிவிடும். கிம் ஜோங் வுன் சமாதானப் பேச்சுவார்த்தையையே விரும்புகிறார் என்று எனக்குச் சில நொடிகளில் தெரிந்தது. அதன் பின்னர் நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தொடங்கினோம்” என்றார். தனது நாட்டு மக்களுக்காகத் தைரியமான முடிவை கிம் மேற்கொண்டுள்ளதாகவும், இதனால் உண்மையான மாற்றம் ஏற்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
வடகொரியாவில் அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதனைக் கண்காணிக்கும் பணியில் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட சர்வதேசப் பார்வையாளர்கள் இடம்பெறுவார்கள் என்றும் அவர் உறுதியளித்தார். வடகொரியாவுடன் ஏற்படும் மோதலால் தென்கொரியாவைச் சேர்ந்த மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறிய ட்ரம்ப், அணு ஆயுதப் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்துவதாக உறுதியளிக்கும்வரை, வடகொரியா மீதான தற்போதுள்ள பொருளாதாரத் தடைகள் தொடருமென்று தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பை நடத்தியதற்காக சிங்கப்பூர் அரசுக்கு ட்ரம்ப் நன்றி தெரிவித்தார். அதோடு, இதனை சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரிய அரசுகளுக்கு அர்ப்பணம் செய்வதாகக் கூறினார்.
இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தில், கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலைத்திருக்க இரு நாடுகளும் சேர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளும் என்றும், ஏப்ரல் 27, 2018 அன்று கையெழுத்தான பன்முஞ்சோம் அறிவிப்பில் முழுமையாக அணு ஆயுதங்கள் அழிக்கப்படுமென வடகொரியா தெரிவித்துள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அணு ஆயுத ஒழிப்பு குறித்த விவகாரத்தில் கிம்மின் வார்த்தைகளை நம்புவதாகக் குறிப்பிட்டார் ட்ரம்ப். இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், வடகொரியாவில் இருக்கும் அமெரிக்கக் கைதிகளை விடுவிக்க, கிம் ஒப்புக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
சரியான நேரம் வரும்போது வடகொரியத் தலைநகர் பியோங்யாங் செல்வேன் என்றும், குறிப்பிட்ட காலம் கனியும்போது அமெரிக்காவுக்கு வருமாறு கிம் ஜோங் வுன்னுக்கு அழைப்பு விடுப்பேன் என்றும் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக