2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரணாப் முகர்ஜியைப் பிரதமராக ஆர்எஸ்எஸ் முன்னிறுத்தக்கூடும் என்று சிவசேனா தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 7ஆம் தேதி நாக்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டு உரையாற்றினார். ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரணாப் முகர்ஜியைப் பிரதமராக ஆர்எஸ்எஸ் முன்னிறுத்தலாம் என்று சிவசேனா சந்தேகம் கிளப்பியுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் அதிகாரபூர்வப் பத்திரிகையான சாம்னாவில், “2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒருமித்த கருத்தின் அடிப்படையில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படலாம். டெல்லியில் உள்ள அரசியல் சக்திகள் இந்த முடிவை எடுக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன. இதேபோல ஆர்எஸ்எஸ் அமைப்பும் பிரதமர் வேட்பாளருக்கு மாற்றாக பிரணாப்பை நிறுத்தும் முயற்சியிலும் ஈடுபடலாம்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேபோல், சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், “பாஜகவுக்குத் தேவையான இடங்கள் கிடைக்காத சூழ்நிலையை ஊகிக்கும் ஆர்எஸ்எஸ் பிரணாப் முகர்ஜியைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கத் தயாராகிவருவதாக நாங்கள் உணர்கிறோம். மேலும் 2019 தேர்தலில் பாஜக பெரிய அளவில் பெரும்பான்மையிலிருந்து பின்னடைவைக் காணும் நிலை உள்ளது. பாஜக குறைந்தது 110 இடங்களையாவது இழக்கும்” என்று ஏஎன்ஐ ஊடகத்திடம் நேற்று (ஜூன் 10) தெரிவித்திருந்தார்.
எனினும் தனது தந்தை மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட மாட்டார் என்று பிரணாப்பின் மகள் சர்மிஷ்டா முகர்ஜி நேற்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “மிஸ்டர் ராவத், இந்திய குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற நிலையில், எனது தந்தை மீண்டும் தீவிர அரசியலுக்குள் செல்லப் போவதில்லை” என்று பதிவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக