ஆண்டிப்பட்டி: தொடக்கப்பள்ளி, நடுநிலை பள்ளி மாணவர்கள் அனைவரும் தற்போது படு சாமர்த்தியமாகவும், துணிவுடனும், திறமையுடனும் செயல்பட்டு வருகின்றனர்.
முன்பெல்லாம் இத்தகைய பள்ளி மாணவர்கள் தங்களது ஆசிரியர்களின் முன்னால் நின்று பேசவும், சந்தேகங்களை கேட்கவும் கூட வெட்கப்பட்டு, தயங்கி, பயந்து நின்றனர்.
ஆனால் தற்போது அந்த நிலை மாறியுள்ளது. ஆசிரியர்களிடம் சந்தேகங்களை மட்டுமல்ல, அவர்கள் செய்யும் தவறுகளை பகிரங்கமாகவே கேட்க துணிந்துவிட்டனர்.
பள்ளிக்கு ஆசிரியர் லேட்டாக வந்தாலும் சரி, பாடங்களை ஒழுங்காக நடத்தாவிட்டாலும் சரி, அதனை எதிர்த்து போராடும் அறிவினையும் பக்குவத்தையும் பெற்றிருப்பதுடன், தங்களுக்கு கல்வி மீதான அக்கறையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
தற்போது ஆண்டிப்பட்டியிலும் இப்படித்தான் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆனால் இங்கு தலைமை ஆசிரியருக்கு எதிராக மாணவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
வருஷநாடு சிங்கராஜபுரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.
இங்கு 120 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்ரீமதி. இவருடன் 7 ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த பள்ளிக்கு அரசின் மூலம் கிடைக்கும் நிதியை தலைமை ஆசிரியர் தனது சொந்த தேவைகளுக்கு எடுத்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
தன் தேவைகளை அனைத்தையும் பள்ளிக்கு அரசு உதவிய பணத்திலேயே பூர்த்தி செய்துகொண்டதாகவும், பள்ளியின் வளர்ச்சிக்கு எதையுமே அவர் செய்யவில்லை என்றும் மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது கடந்த 2 வருடமாகவே இப்படி நடந்து வந்திருக்கிறது.
இது குறித்து மற்ற ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் அளித்தனர். ஆனாலும் தலைமை ஆசிரியர் ஸ்ரீமதி மீது ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இதனால் பொறுத்து பார்த்த பள்ளி ஆசிரியர்களில் ஒருவர் தலைமை ஆசிரியரிடமே நேரிடையாக பணம் கையாடல் பற்றி கேட்டு விட்டார்.
இதன் காரணமாகவே அந்த ஆசிரியர் உடனடியாக வேறு இடத்துக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது விவகாரம் மாணவர்கள், பிற ஆசிரியர்களுக்கு இன்று தெரியவந்ததையடுத்து பெரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர்களும், மாணவ-மாணவிகளும் இன்று பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கையாடல் பணம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியரை மீண்டும் இதே பள்ளியில் அமர்த்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்து மாணவர்கள் முழக்கமிட்டனர். இந்த போராட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்களும் பங்கேற்றுள்ளதால் அங்கு பரபரப்பு நிலவிவருகிறது.
source: oneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக