பள்ளி மாணவர்களுக்கு இலவச கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள், 36 உயர்நிலைப் பள்ளிகள், 1 உருது உயர்நிலைப்பள்ளி, 1 தெலுங்கு உயர்நிலைப்பள்ளி, 92 நடுநிலைப் பள்ளிகள் (தமிழ், தெலுங்கு மற்றும் உருது) 122 தொடக்கப்பள்ளிகள் மற்றும் 30 மழலையர் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. 98,857 மாணவ, மாணவர்கள் படித்து வருகின்றனர். 4,041 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அனைத்து வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும் தினமும் ஒரு மணி நேரம் விளையாடுவதற்கான நேரம் ஒதுக்கப்பட்டு வருகிறது.
விளையாட்டு போட்டிகளை மாணவ, மாணவிகளுக்கு கற்று தர ஒரு பள்ளிக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
இருப்பினும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் மாணவ, மாணவிகள் விளையாட்டை விதிப்படி முறையாக கற்று கொள்ள முடிவதில்லை.
மேலும், கிரிக்கெட், கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகளுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள், போதிய இட வசதியும் இருப்பதில்லை.
இதனால், மாணவ, மாணவிகள் விளையாட்டில் கவனம் செலுத்துவதில்லை. இந்த குறையை போக்கும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
முதற்கட்டமாக, சென்னை நுங்கம்பாக்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிரிக்கெட் பயிற்சி துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பயிற்சியாளர் நியமிக்கப்பட்டு ஆடுகளத்தை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளின் விளையாட்டு திறனை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளோம். கிரிக்கெட் போட்டிக்கு பயிற்சி அளிக்க உள்ளோம். முதற்கட்டமாக, நுங்கம்பாக்கம் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இலவச கிரிக்கெட் பயிற்சி தொடங்க உள்ளது.
மாணவர்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து சென்னை முழுவதும் அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் கிரிக்கெட் பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக