நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சென்னையிலிருந்து காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், 2012 -ஆம் ஆண்டில் நாகையில் தொடங்கப்பட்டது
நாகப்பட்டினம், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம். ஜெயலலிதா மறைவுக்குப்
பின்னர், தமிழ்நாடு, டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் என இந்தப் பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றப்பட்டது.
தனியார் கட்டடத்தில் இயங்கி வந்த மீன்வளப் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்துக்கு, நாகப்பட்டினம், பனங்குடியில் 36 ஆயிரம் சதுர அடி பரப்பில், ரூ. 12 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டும் பணி நடைபெற்றது.
துணைவேந்தர், பதிவாளர் மற்றும் இதர பல்கலைக்கழக அதிகாரிகளுக்கான அலுவலகங்களுடன், நவீன வசதிகளுடன் கூடிய நீர்த்தரச் சோதனை ஆய்வகக் கட்டடம், பல்கலைக்கழக நூலகம், ஆவணக் காப்பகம் மற்றும் குளிர்சாதன வசதியுடன் கூடிய கருத்தரங்கக் கூடம் ஆகியவற்றைக் கொண்டதாக இந்தப் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தின் புதிய கட்டடம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் பல்கலைக்கழகப் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தார்.
மீன்வளத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச் செயலாளர் கே. கோபால் ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக