மதுரை மாவட்டத்தை சேர்ந்த, களஞ்சியம் பெண்கள் சுய உதவிக் குழு தலைவர், சின்னப்பிள்ளை பெருமாளுக்கு'அவ்வையார் விருது' வழங்கி, முதல்வர் பழனிசாமி கவுரவித்தார்.
சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை அறிவியல், பண்பாடு, கலாசாரம், பத்திரிகை, நிர்வாகம் உட்பட, பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்களை கவுரவப்படுத்த, தமிழக அரசு சார்பில், சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, 'அவ்வையார் விருது' வழங்கப்படுகிறது.
விருது பெறுபவருக்கு, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், எட்டு கிராம் தங்கப்பதக்கம், சான்றிதழ் ஆகியவை வழங்கப்படுகிறது.
மதுரை மாவட்டத்தை சேர்ந்த, 66 வயது நிரம்பிய, சின்னப்பிள்ளை பெருமாள், களஞ்சியம் பெண்கள் சுய உதவிக் குழு தலைவராக உள்ளார். 30 ஆண்டுகளாக, கிராமப்புற ஏழைப் பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பணியாற்றி வருகிறார்.
2,589 சுய உதவிக் குழுக்களை உருவாக்கி, கிராமப்புறப் பெண்களின் வாழ்வை வெற்றிகரமாக மாற்றி, சமுதாய மேம்பாட்டிற்கு முக்கிய பங்காற்றி உள்ளார்.
அவரது பணியை பாராட்டி, மத்திய அரசு, 2000ம் ஆண்டு, 'ஸ்ரீசக்தி புரஸ்கார்' விருது வழங்கியது. இந்த ஆண்டு, தமிழக அரசின் அவ்வையார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில், நேற்று அவருக்கு, முதல்வர் பழனிசாமி, விருதுக்கான, ஒரு லட்சம் ரூபாய் காசோலை, எட்டு கிராம் தங்கப்பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி, பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.இந்நிகழ்ச்சியில், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா கலந்து கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக