தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்க நீட் தேர்வில் தேர்ச்சியைத் தவிர வேறு சில தகுதிகளும் அவசியமாகின்றன.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை (ஜூன் 11) முதல் தொடங்க உள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு கடந்த ஆண்டு முதல் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கலந்தாய்வில் பங்கேற்க அவசியமான விதிமுறைகளில் மாணவர்களுக்கு எழும் சந்தேகங்கள் குறித்து அதிகாரிகள் அளித்த விளக்கம்:
தமிழக மாணவர்களுக்கே 2,594 எம்.பி.பி.எஸ். இடங்கள்:
தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 3,050 இடங்கள் உள்ளன. அவற்றில் 15 சதவீத அகில இந்திய இடங்கள் போக மீதமுள்ள 2,594 இடங்கள் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படும். இந்த இடங்கள் அனைத்தும் தமிழக மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
*🔴🔴170 பி.டி.எஸ். இடங்களும்*
.சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.
அவற்றில் அகில இந்திய இடங்கள் 30 போக, மீதம் உள்ள 170 இடங்களும் தமிழக மாணவர்களுக்கே கலந்தாய்வின் மூலம் வழங்கப்படும். இந்த இடங்கள் வேறு மாநில மாணவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது.
தனியார் மருத்துவக் கல்லூரி இடங்களும்...: தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களும் தமிழக மாணவர்களுக்கே வழங்கப்படும்.
அதே சமயம் அகில இந்திய இடங்களுக்காக நடைபெறும் கலந்தாய்விலும் தமிழக மாணவர்கள் பங்கேற்று இடங்களைப் பெறலாம்.
இரண்டு ஒதுக்கீட்டிலும் இடங்கள் கிடையாது: அகில இந்திய இடங்களைப் பெற்றவர்கள் தமிழக இடங்களுக்கான கலந்தாய்விலும் பங்கேற்று இடங்களைப் பெற முடியாது.
தமிழகத்தில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், அகில இந்திய கலந்தாய்வில் பெற்ற இடங்களைச் சமர்ப்பித்துவிட்டே தமிழகத்தில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைத் தேர்வு செய்ய முடியும்.
*🔴🔴தமிழக மாணவர்களுக்கு தகுதிகள் என்ன?*
கடந்த ஆண்டு கலந்தாய்வில் போலி இருப்பிடச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்ததாக 9 மாணவர்கள் மீது புகார் எழுந்தது.
தமிழக மாணவர்களுக்கான தகுதிகள் என்ன என்பது குறித்து மருத்துவக் கல்வி இயக்ககம் தெளிவாக வரையறுத்துள்ளது.
அதன்படி, தமிழக இடங்களுக்காக விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். தமிழகத்திலேயே 8-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த மாணவர்கள் இருப்பிடச் சான்றிதழ் எதுவும் சமர்ப்பிக்க வேண்டாம்.
ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 8-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வேறு மாநிலங்களில் படித்திருந்தால் கட்டாயம் இருப்பிடச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
அந்தச் சான்றிதழானது தகுந்த அதிகாரியால் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இருப்பிடச் சான்றிதழுடன் கடவுச்சீட்டு, குடும்ப அட்டை, பிறப்புச் சான்றிதழ் ஆகிய ஏதாவது ஒரு ஆவணத்தின் நகலுடன் சேர்த்துச் சமர்ப்பிக்க வேண்டும்.
இருப்பிடச் சான்றிதழுடன் ஆவணத்தின் நகல் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
*🔴🔴குறைந்தபட்ச பிளஸ் 2 மதிப்பெண்:*
எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் அனைத்துப் பிரிவினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்று, இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் தலா 50 சதவீத மதிப்பெண் (200-க்கு 100) பெற்றிருக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோர் மேலே குறிப்பிட்ட பாடங்களில் தலா 40 சதவீத (200-க்கு 80) மதிப்பெண்ணும், மாற்றுத்திறனாளிகள் மேலே குறிப்பிட்ட பாடங்களில் தலா 45 சதவீத (200-க்கு 90) மதிப்பெண்ணும் பெற்றிருந்தால் போதுமானது.
நீட் தகுதி மதிப்பெண்: இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவு அண்மையில் வெளியிடப்பட்டது.
நீட் தேர்வில் அனைத்துப் பிரிவினர் 119 மதிப்பெண், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோர் 96 மதிப்பெண்ணும் எடுத்திருந்தால் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த விதிமுறைகளின்படியே எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
விதிமுறைகள் தொடர்பான கூடுதல் விவரங்கள் எம்.பி.பி.எஸ்./பி.டி.எஸ். தகவல் குறிப்பேட்டில் இடம் பெற்றிருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக