தெலங்கானாவில் தென்னிந்தியாவின் முதல் அரசு கண் வங்கி தொடங்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள சரோஜினி தேவி கண் மருத்துவமனையில் ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அரசு கண் வங்கியை அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சி.லக்ஷமா ரெட்டி நேற்று (ஜூன் 13) திறந்துவைத்தார்.
இதையடுத்து பேசிய அமைச்சர், ”ஏழை மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க, அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், நாட்டின் முதல் கருவுற்றல் மையம் இங்குதான் அமைக்கப்பட்டது. மேலும், மக்களுக்கு எல்லாவிதமான பரிசோதனைகளும் செய்யும் வகையில் நோயறிதல் மையமும் தொடங்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் ஏழை மக்களுக்கு வழக்கமாக சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. அவர்களுக்கு சிறப்பு அல்லது மேல் சிகிச்சை தேவைப்பட்டால், அவர்களை ஹைதராபாத் மருத்துவமனைக்குச் செல்லுமாறு அறிவுறுத்துவோம். ஆனால் தற்போது மாநிலத்திலுள்ள அரசு மருத்துவமனைகளிலும் சிறந்த சிகிச்சைக்கான உபகரணங்கள் அனைத்தும் இருக்கின்றன. தெலங்கானாவை உருவாக்கிய பிறகு இந்த மாதிரியான உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்பட்டன. அதனால் தற்போது மக்கள் சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளை விட அரசு மருத்துவமனைகளைத் தேர்வு செய்கின்றனர்.
இன்னும் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த, கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து சிஎஸ்ஆர் நிதி பெறத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது அரசு. ஒரு கோடி ரூபாய் செலவில் அரசு கண் வங்கி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 24 மணி நேரம் வரை மட்டுமே கார்னியாவைப் பத்திரப்படுத்த முடியும். தற்போது, 60 நாள்கள் வரை பத்திரப்படுத்தி வைக்க முடியும். ஒவ்வொரு வருடமும், ஒரு கோடி மக்கள் இறக்கின்றனர். அதில், 2 சதவிகித மக்கள் தங்கள் கண்களை தானம் செய்தால், நாட்டிலுள்ள மொத்த பார்வையற்ற மக்களையும் பார்வையடையச் செய்ய முடியும். மக்கள் தங்களின் இறப்புக்குப் பிறகு கண்களை தானம் செய்து, மற்றவர்களுக்கு உதவ வேண்டும்” என்று விளக்கமளித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக