உயர் கல்வியை மேம்படுத்துவதற்கான நிதி உதவி பெறத் தனியார் நிறுவனங்கள் மற்றும் உயர் வருமானம் பெறுவோரிடம் கூட்டு சேர்ந்திட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் திட்டம் ஒன்றைத் தயாரித்து அதற்கான முன்வரைவை அமைச்சரவையின் பரிசீலினைக்கு சமர்ப்பிக்க உள்ளது.
இதன் மூலம் நாட்டின் உயர் கல்விக்கான நிதி வரவு கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து லைவ் மின்ட் என்ற இணைய தள பத்திரிகையில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
இந்தத் திட்டமானது உயர் கல்வி நிதியளிப்பு ஏஜன்சியின் மூலம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசின் இரு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்திட்டத்திற்காக சந்தையிலிருந்து 1 லட்சம் கோடி திரட்டப்படவுள்ளது. திரட்டப்படும் நிதியானது உயர் கல்வி நிறுவனங்களின் கட்டுமானத் தேவைகளுக்காகச் செலவழிக்கப்படும்.
இதனால் மூன்று விதமான பயன்கள் கிடைக்கும் என்று ஒரு அரசு அதிகாரி தெரிவித்துள்ளார். முதலாவதாக, நிதியானது வெளிப்படையான தனியார் நிதியாக இருக்கும். இரண்டவதாக உயர் கல்வியை நிர்வகிப்பதில் வெளியாரின் அனுபவம் கிடைக்கும், மூன்றாவதாக நிறுவனரீதியாக ஊழல் மற்றும் முறைகேடு நடப்பதற்கான வாய்ப்புகள் தடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அந்த இதழில் கூறப்பட்டுள்ளது.
பிப்ரவரியில் மத்திய நிதித் துறை அமைச்சர் அருண் ஜேட்லி கல்வித் துறைக்கு இந்திய அரசு முதன்மை முக்கியத்துவம் அளிப்பதாகக் கூறியிருந்தார். ஆனால் நடைமுறையில் மத்திய அரசு கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்பதைப் பல தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
2014இல் டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் 10 விழுக்காடு மாணவர்கள்தான் உயர் கல்வி பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர் என்று வளர்ச்சித்துறை பொருளாதார நிபுணர் அபுசேல் செரிப் கூறியதாக குறிப்பிட்டிருந்தது. இதில் பீகார்,உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் உயர் கல்வியைப் பெற முடியாத மோசமான நிலையில் உள்ளன.
இது குறித்து லைவ் மின்ட்டின் செய்தியில் இந்தியாவின் தரமின்மையும் பொறுப்பின்மையும் புதிய ஆக்கபூர்வ கண்டுபிடிப்புகள் இல்லாததும்தான் உயர் கல்வியை பாதிக்கும் பிரச்சினைகளாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
உயர் கல்வியைத் தனியார்மயமாக்குவதுதான் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு என இந்திய அரசு கருதுகிறது. ஆனால் தனியாரிடம் முதலீட்டை கோருவதுடன் அரசும் கல்விக்கென அதிக முதலீடு செய்ய வேண்டும்.
மற்ற நாடுகளை ஒப்பிடும்போது உயர் கல்விக்கான இந்திய அரசின் நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவாகும். சீனாவில் கல்விக்காக ஒதுக்கப்படும் மொத்த தொகையான 565 பில்லியன் டாலரில் 60 விழுக்காடு அந்நாட்டின் அரசிடமிருந்தே வருகிறது என குயின்ட் என்ற இணைய தள இதழ் தெரிவிக்கிறது.
நன்றி
மின்னம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக