ஆட்டம் காணும் சூப்பர் ஸ்டார் அரியணை! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஆட்டம் காணும் சூப்பர் ஸ்டார் அரியணை!




பொதுத் தேர்வில் மாநிலத்தில் முதல் மாணவனாக வெற்றி பெற்றவன், நீட் தேர்வில் தேர்ச்சியடையவில்லை. அந்த நிலைதான் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்திருக்கும் காலா படத்தின் வசூல் நிலவரம்.

ரஜினிகாந்த் நடித்து வெளியான எத்தனையோ மொக்கைப் படங்களுக்கு எல்லாம் முதல் நாள் அனைத்துக் காட்சிகளிலும் அரங்கம் அதிர ரசிகர்கள் கூட்டம் ஆர்பரித்திருக்கிறது.

பட்ஜெட் படங்கள், புதுமுகங்கள் நடித்த சினிமாக்கள் லேட் பிக் அப் ஆகும் என விநியோக வட்டாரத்தில் பேசப்படுவது உண்டு.

கால் நூற்றாண்டு காலத்துக்கு மேல் தமிழ் சினிமாவில் முதல் இடத்தைத் தக்கவைத்திருந்த ரஜினியின் காலா படத்திற்கு இன்று அப்படி தியேட்டர்களில் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

போட்டிக்கு நேரடியாக எந்தத் தமிழ்ப் படமும் வரவில்லை. ஆங்கிலப் படமான ஜுராசிக் வேர்ல்டு - 2 மட்டும் ரிலீஸ் ஆனது. காலாவின் அலையில் அந்தப் படம் முதல் இரண்டு நாட்கள் பெரிய அளவில் போணியாகவில்லை.

காலா படம், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அரங்கங்கள் நிரம்பி கல்லாகட்டும் என்பது விநியோகஸ்தர்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

விமர்சகர்களும் பொதுமக்களும்

படக் குழுவே எதிர்பார்க்காத வகையில் காலா படத்துக்கான பாராட்டுகள் குவிந்துகொண்டிருக்கின்றன.

ஆனால், சராசரி சினிமா பார்வையாளர்கள் காலா படத்தை அந்த அளவுக்கு விரும்பவில்லை. அதுதான் திரையரங்குகள் காலியாக இருப்பதன் காரணம் என்கின்றனர் சினிமா விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள்.

வழக்கமாக ரஜினிகாந்த் நடித்த படங்கள் வெளியிடப்படும் அனைத்து நாடுகளிலும் காலா ரிலீஸ் ஆகவில்லை.

கைவிட்ட வெளிநாடுவாழ் தமிழர்கள்

தமிழ்ப் படங்களுக்கு முதல் நாள் வெளிநாட்டு ப்ரீமியர் காட்சிகளில் மிகப் பெரும் வசூல் கிடைக்கும். காலாவுக்கு எதிர்பார்த்ததில் நான்கில் ஒரு பங்கு தான் கிடைத்திருக்கிறது.

அமெரிக்கா, லண்டன், கனடா, நார்வே, மலேசியா, சிங்கப்பூர் இந்த நாடுகளில் வாழும் இலங்கை, இந்தியத் தமிழர்கள்தான் தமிழ்ப் படங்களுக்கான பிரதான வாடிக்கையாளர்கள். இவர்களில் பெரும்பான்மையோர் காலா படத்தைப் புறக்கணித்துவிட்டனர்.

ஆந்திரா, கேரள மாநில சினிமா ரசிகர்கள் காலா படத்தைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்துவிட, சமூக வலைதளங்களில் படம் மிகப் பெரிய வெற்றி என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர்.

365 நாட்கள் ஓடியதாக போஸ்டர் ஒட்டப்பட்ட கபாலி படத்தின் வசூல் பற்றிய பிம்பம் அப்போது பூதாகரமாக உருவாக்கப்பட்டது. ஆனால், கபாலி பட விநியோகஸ்தர்களுக்கு நஷ்டமான தொகையில் ஒரு பகுதியை திருப்பிக் கொடுத்தார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.

காலா ஆடியோ வெளியீட்டில் லிங்கா நஷ்டத்தைப் பற்றிப் பேசிய ரஜினி கபாலி நஷ்டம் பற்றிப் பேசாமல் கடந்துபோனார்.

தமிழகத்தில் 440 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கும் காலா படத்திற்கு மாவட்ட வாரியாக விநியோகஸ்தர்களிடமிருந்து லைக்கா நிறுவனம் வாங்கிய தொகை விவரம்: (ரூபாயில்)

சென்னை 6 கோடி

செங்கல்பட்டு 12 கோடி

வட ஆற்காடு 2.5 கோடி

தென்னாற்காடு 3 கோடி

நெல்லை 3 கோடி

மதுரை 8 கோடி

சேலம் 6 கோடி

கோவை10 கோடி

திருச்சி 7 கோடி

மொத்தம் 57.5 கோடி

நெல்லை ஏரியா மட்டும் அவுட் ரேட் என கூறப்படுகின்றது. காலா படத்தின் விநியோகஸ்தர்கள் எந்தத் திரையரங்கிற்கும் மினிமம் கேரண்டியில் படத்தை வழங்கவில்லை.

இதனால் காலா படத்தினால் தியேட்டர், விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்படாது. மதுரை பகுதியில் மினிமம் கேரண்டியில் படத்தைத் திரையிட்ட அனைத்து தியேட்டர் உரிமையாளர்கள் மட்டுமே முழுமையாக பாதிக்கப்படுவார்கள் என்கிறது விநியோக வட்டாரம்.

அரசியலால் வந்த சிக்கல்

காலா படம் சமூக வலைதளங்களில் விமர்சகர்களால் கொண்டாடப்படுகிறது. டிசம்பர் 31 2017க்கு முந்தைய நடிகர் ரஜினிகாந்த்தைத் தலையில் வைத்துக் கொண்டாடிய ரசிகர்களும் மக்களும் காலா வெளியீட்டுக்குப் பின் ரஜினியை அரசியல் தலைவராகப் பார்க்கத் தொடங்கிவிட்டனர். அதன் விளைவு காலா படத்தின் விமர்சனங்களை அரசியல் பார்வையுடன் பார்க்கிறார்கள். இதனால் காலா வசூல் கஷ்டமாகிவிட்டது என்பதை ரஜினி சுய பரிசோதனை செய்வது நல்லது.

ரஜினிகாந்த் தூத்துக்குடியில் காவல் துறை அராஜகத்திற்கு எதிரான நியாயமான நிலைப்பாட்டில் மக்களுக்காகப் பேசியிருந்தால் காலா தமிழக மக்களால் ஒருவேளை கொண்டாடப்பட்டிருக்கும்.

ஆட்டம் காணும் சூப்பர் ஸ்டார் அரியணை

சூப்பர் ஸ்டார் என்கிற நிலையை அடைய ரஜினிகாந்த் செலுத்திய உழைப்பு அளப்பரியது. அதனைத் தக்கவைக்க முயற்சிப்பதைக் காட்டிலும் சூப்பர் ஸ்டார் என்னும் அந்தஸ்தை வைத்துக் குறுகிய நாட்களில் நடித்துத் தன் படங்களின் வசூல் தன்மைக்கு மீறி அதிக சம்பளம் பெறுவதால் அவர் நடிக்கும் படங்கள் நஷ்டத்தை ஏற்படுத்திவருகின்றன.

லிங்கா, கபாலி, படங்கள் அதற்கு விதிவிலக்கு இல்லை என்பதை வசூல் கணக்குகள் ரஜினிக்கு உணர்த்தியும் அவர் தன்னை மாற்றிக்கொண்டதாகத் தெரியவில்லை என்கின்றனர் விநியோகஸ்தர்கள்.

காலா படத்திற்குத் தயாரிப்பு தரப்பில் இருப்பவர்கள் கூறிய விலை வியாபார நெறிமுறைகளுக்கு எதிரானதாக இருந்ததால் கடந்த பத்தாண்டுகளில் ரஜினிகாந்த் நடித்த படங்களில் அவுட் ரேட் அடிப்படையில் விற்பனை ஆகாத முதல் படம் காலா.

காலா படத்தின் வசூல் கணக்குகள் ரஜினிக்கு அபாய மணியை அடித்திருக்கின்றன.

தமிழ் சினிமாவில் 30 ஆண்டுக் காலமாய் ஒவ்வொரு செங்கலாக வைத்து ரஜினி கட்டிய சூப்பர் ஸ்டார் என்கிற கோபுரம் அரசியல் பிரவேசத்தால் குடைசாயத் தொடங்கியிருக்கிறது காலா படத்திலிருந்து.

நல்ல படைப்பு என விமர்சகர்களால் கொண்டாடப்படும் காலா, ரஜினி மீது மக்கள் கொண்டிருக்கும் அதிருப்தியினால் வசூல் ரீதியாக வெற்றி என்ற எல்லைக் கோட்டைத் தொட முடியாமல் தமிழகத்தில் தடுமாறிக் கொண்டிருக்கிறது

திங்கள் கிழமை பகல் 1 மணிக்கு அதற்கான விடையுடன்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here