இந்தியாவின் உணவுப் பொருட்கள் மானியத் திட்டத்தால் ஒன்றும் மாறிவிடாது என்று உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியா கூறியுள்ளது.
இந்தியாவில் விவசாயத் துறையைச் சார்ந்து 20 கோடி எண்ணிக்கையிலான ஏழை மக்கள் உள்ளனர். இதனால் அரிசி, கோதுமை உள்ளிட்ட சில உணவுப் பொருட்கள் உற்பத்திக்கு மானியம், குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட திட்டங்களை அரசு அறிவித்துச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்கள் உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்குப் புறம்பாக இருப்பதாகவும், மானியத் திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் இந்த மானியத் திட்டங்களால் ஒன்றும் மாறி விடாது என்றும், இவை ஏழை விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்திக்கு உரிய விலையை அளிப்பதற்காக உண்டாக்கப்பட்ட திட்டங்கள் என்றும் இந்தியா உலக வர்த்தக அமைப்பிடம் விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவர் பிசினஸ் லைன் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், "உலக வர்த்தக அமைப்பின் வேளாண் கூட்டத்தில் அமெரிக்கப் பிரதிநிதி இந்தியாவின் குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து கேள்வியெழுப்பினார். உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைக்கு உட்பட்டுத்தான் இந்தியா செயல்படுகிறது, 20 கோடி ஏழை விவசாயிகளைக் காக்கும் விதமாகவும், விவசாயத் துறையில் உரிய சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் விதமாகவும்தான் இந்தத் திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது என்று இந்தியப் பிரதிநிதி பதிலளித்துள்ளார்" என்று கூறியுள்ளார்.
இருப்பினும் இந்தியாவுடனான வர்த்தகத்தில் போதிய வெளிப்படைத்தன்மை இல்லை என்று ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து மற்றும் பராகுவே உள்ளிட்ட நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக