இன்று பாரதியார் நினைவு தினம்
“அச்சமில்லை, அச்சமில்லை,அச்சமில்லை” என்று எழுச்சி, புரட்சி, வீரம் தெறிக்கும் பாடல்கள் முழங்கிய தமிழ் தாயின் வீர மகனான மகாகவி பாரதியாரின் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. தன் வீட்டில் அடுப்பு எரிவதைப் பற்றி கவலைப்படாமல் ஏழைகளின் வீட்டில் அடுப்பு எரியவில்லை என்று குமுறிய காவலன் மகாகவி பாரதியார்.
1882 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் சின்னசுவாமி ஐயருக்கும், லட்சுமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார் சுப்பையா என்கிற பாரதி. இயல்பிலேயே கவி பாடும் ஆற்றல் இருந்ததால் தனது 5ஆவது வயதில் பாரதி என்ற பட்டத்தைப் பெற்றார். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த பாரதியார் தனது 14-வது வயதில் செல்லம்மா என்பவரை மணம் புரிந்து கொண்டார். நெல்லையில் உள்ள இந்துக் கல்லூரியில் கல்வி பயின்ற பாரதி அதற்குப் பின்னர் காசிக்குச் சென்று உயர்கல்வியைத் தொடர்ந்தார்.
1901 ஆம் ஆண்டு மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பிய பாரதி எட்டயபுரம் மன்னரின் அவைப்புலவராகத் திகழ்ந்தார். பின்னர் 1904 ஆம் ஆண்டு சுதேசமித்திரன் பத்திரிகையில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். 1905ஆம் ஆண்டு சூரத் காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற சென்றபோது அவர் அங்கு தான், விவேகானந்தரின் சீடரான நிவேதிதா தேவியைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பு தான் பாரதியின் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்து பெண் விடுதலை குறித்த பாடல்களை எழுத தூண்டுதலாக அமைந்தது.
குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற தலைசிறந்த படைப்புகள் பாரதியாரால் படைக்கப்பட்டன. பாப்பா பாட்டு, நாட்டுப்பற்று பாடல்கள், தோத்திரப் பாடல்கள், தத்துவப் பாடல்கள், வசன கவிதை, ஞானரதம் , ஆறில் ஒரு பங்கு என பல கவிதைகள், கதைகள், கட்டுரைகள் என எழுதிக் குவித்த பாரதியார் செப்டம்பர் 11ஆம் தேதி, 1921 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார்.
தமிழின் காதலனாக பெண் விடுதலையின் காவலன் சுதந்திர போராட்ட வீரனாக, சாதிகளை சாடிய புரட்சியாளனாக இருந்த பாரதியை தமிழுலகம் உள்ளவரை இந்த தமிழ் கவிஞன் புகழ் மறையாது. உடல் மறைந்தாலும் தமிழில் உயிர் வாழும் இந்த தார்மீக புலவனின் கவிதை வரிகள்
தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக