தமிழகத்தில் மாற்று பள்ளிகளை தேடும் 5 லட்சம் மாணவர்கள் - நூற்றுகணக்கான பள்ளிகள் மூடப்படுகிறது
ராதிகா ஒரு தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி. அடுத்த வருடம் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற தயார் ஆக வேண்டிய சூழலில், ராதிகாவும், அவரது பெற்றோரும் மற்றொரு பள்ளி கூடத்தை தேடி அலைய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ராதிகாவுடன், கிட்டத்தட்ட 5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களும் 2 மாத கால அளவுக்குள் வேறு பள்ளிக்கு இடம் மாற வேண்டிய நிர்பந்தத்தில் அலைகிறார்கள். கடந்த திங்கட்கிழமையன்று, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் 31 மேய் 2016 அன்றுடன் 746 தனியார் பள்ளிகளின் தற்கால அங்கீகாரம் காலாவதியாக உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த பள்ளிகூடங்களுக்கு, கூடுதலாக அனுமதியை நீட்டிகொடுக்க கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் மூலம், இந்த தனியார் பள்ளிகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் அங்கு படிக்கும் மாணவர்கள், குறைந்த கால கட்டத்தில் வேறொரு பள்ளிக்கு மாற வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். இந்தியாவில் இயங்கும் அனைத்து தனியார் பள்ளிகளும், அந்தந்த மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்றே இயக்கப்பட வேண்டும். அந்த அங்கீகாரம், மாநில அரசு நிர்ணயிக்கும், விதிமுறைகளை நிறைவேற்றும் வகையில் இருந்தாலே பள்ளிகளுக்கு வழங்கப்படும்.
தமிழகத்தை பொறுத்தவரை, இந்த 746 பள்ளி கூடங்களும், இந்த விதிமுறைகளை நிறைவேற்றி கொள்ள வசதியாக கால அவகாசம் கொடுக்கப்பட்டன. இதனை தொடர்ந்து, தற்காலிக அங்கீகாரத்தை கொண்டு அவை இயங்கி வந்தன. ஆனால், விதிமுறைகளை நிறைவேற்ற வேண்டி அரசு வழங்கிய கால அவகாசத்தில், அவற்றை நிறைவு செய்ய இந்த தனியார் பள்ளிகள் தவறி விட்டன.
.சமூக செயற்பாட்டாளர்கள், நீதிமன்றத்தின் இந்த உத்தரவை வரவேற்றுள்ள அதே வேளையில், மாணவர்களின் பெற்றோர், இது தேவையற்ற நடவடிக்கை என்று வருத்தத்துடன் கூறுகிறார்கள். ராதிகாவின் அம்மா நந்தினி கூருகையில்,” எனது மகள் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். யாராவது அவளது 12 ஆம் வகுப்பு படிப்பை பற்றி நினைத்தார்களா ? அவளது பள்ளி தற்போது அங்கீகாரத்தை இழந்தால், நான் வேறொரு பள்ளியை, ராதிகாவின் 12 ஆம் வகுப்பிற்காக தேடி ஓட வேண்டும். அது எங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும்.” என்றார். கல்வித்துறையில் உள்ள ஊழலை எதிர்க்கும் சமூக செயற்பாட்டாளர்கள், விதிமுறை மீறிய பள்ளி கூடங்களின் நடவடிக்கைகளை சுட்டிகாட்டுகிறார்கள். “ இந்த பள்ளிகள், சரியான கட்டிட வரைபடங்களை கொடுக்கவில்லை. அவர்கள் இந்த கட்டிடங்களை கட்டுவதற்கு உள்ளாட்சிகளிடம் அனுமதியும் பெறவில்லை. இத்தகைய நிபந்தனைகளை நிறைவேற்ற கடந்த 2006 லிருந்து 2011 வரை கால அவகாசம் அவர்களுக்கு நீட்டி வழங்கப்பட்டது. ஆனால் 2011 இலிருந்து 2015 வரை இடைப்பட்ட காலத்தில் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைத்தான் நாங்கள் கேட்கிறோம்.” சேன்ஜ் இந்தியா நிறுவனத்தின் நாராயணன் கூறுகிறார்.
இவரும் தடைகோரி வழக்கு போட்டவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாராயணன், அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு பள்ளி கல்வி செயலாளர், கடந்த ஆகஸ்ட் 18, 2015 அன்று வெளியிட்ட உத்தரவை எதிர்த்து, தடைகேட்டு வழக்கு தொடர்ந்தவர். “ நெருக்கடியான வகுப்பறைகள், குறுகிய படிக்கட்டுகள், காற்றோட்டம் இல்லாத சூழல், தீ அணைக்கும் வழி முறைகள் இல்லாமை என இருக்கும் பள்ளிகளுக்கு நீங்கள் எப்படி அங்கீகாரம் கொடுப்பீர்கள் ? இதன்மூலம் குழந்தைகளுக்கு ஒரு ஆபத்தான சூழலையே உருவாக்கி கொடுக்கிறீர்கள்.” என கூறுகிறார் நாராயணன். மேலும் அவர் உச்சநீதிமன்றமும் தேவையான வழிகாட்டுதல்களை, கட்டிடங்கள் கட்டுவதற்கு உருவாக்கியுள்ளன, அவற்றையும் கூட இந்த பள்ளிகள் நிவர்த்தி செய்யவில்லை என்றார். ஆனால் பெற்றோர்களோ, சமூக செயற்பாட்டாளர்கள் கூறுவது போல், எல்லா பள்ளிகளும் ஒன்றும் இவ்வாறு இல்லை என கூறுகின்றனர். “ இந்த பள்ளியில் 2500 மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் அருகில் உள்ள ஒரு பள்ளியை கண்டுபிடித்து, அவற்றில் படிக்க வைப்பது என்பது கடினமான காரியம்” என்றார் ஒரு மாணவனின் தாயான லதா. தொடர்ந்து அவர் கூறுகையில்,” சில நல்ல பள்ளிகளும் கூட இந்த தடைக்குள் வருவது, சற்று கடினமான நிலையை உருவாக்கியுள்ளது. இந்த ஒரு உத்தரவிற்காக ஒரு சில நல்ல பள்ளிகளை வீணாக அடைத்து பூட்ட வேண்டிய அவசியம் இல்லை.” என்றார். நாராயணனிடம் இது பற்றி கேட்ட போது, “ இது மிகப்பெரிய தொகை என்றாலும், ஏதாவது இதில் நீங்கள் செய்ய வேண்டும். இது போன்ற பள்ளிகளில் அட்மிஷன் போட்டதே பெற்றோர்களின் தவறு” என கூறினார். இருப்பினும், பெற்றோர்களின் நிலையை கருத்தில் கொண்டு, நாராயணன் தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், இந்த 746 பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு, அவர்களை பிற தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என கேட்டுகொண்டுள்ளார்.
5 லட்சம் மாணவர்களை குறுகிய கால கட்டத்தில் வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்வது நடைமுறையில் சாத்தியமா என கேட்டபோது, “ அதனை பெற்றோர்களே தீர்மானிக்கட்டும். இந்த பள்ளிகளை மூடும் போது, ஒவ்வொருவரும் வேறு பள்ளிகளை கண்டுபிடிப்பார்கள். 5 லட்சம் மாணவர்கள் என்பது ஒரு பிரச்சினையே இல்லை. இந்த பள்ளிகளில் 50 முதல் 100 பள்ளிகள் வரை, மீண்டும் அனுமதியை பெற கூடும். மற்றவர்களுக்கு, அரசு பள்ளிகளில் இடமுண்டு.” என்றார் நாராயணன். அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் ஆலோசனை, ஒரு விரைந்த தீர்வு தான். ஆனால் பெற்றோர்களுக்கு எந்த அளவு விருப்பம் ஏற்படும் என்பது தான் கேள்வி. “எனது மகளை அரசு பள்ளியில் சேர்ப்பதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. ஏனென்றால் அரசு பள்ளியில் தரம் மிகவும் குறைவாகவே உள்ளது” என்றார் நந்தினி. ஆனால் தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் தரப்பில், இந்த விதிமுறைகள் தெளிவற்றவை என வாதிடுகின்றனர். இதுகுறித்து ஏடிபி போஸ் மேல்நிலை பள்ளியின் முதல்வர் கூறுகையில், “ அவர்கள் வகுத்துள்ள முறைகள் மிகவும் பழைமையானவை. அவை இன்றைக்கு அவை நடைமுறைக்கு உகந்தவை அல்ல. சம்பளம் மற்றும் கட்டிட வரைபட விதிமுறைகள் எல்லாம் இன்றைக்கு பொருந்துவனவாக இல்லை.
அரசு பள்ளிகள் கூட கட்டிடங்களை சரியாக பராமரிப்பதில்லை.” என்றார். மேலும் அவர் “ எந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளுக்கு அனுப்புவார்கள். ? இதே விதிமுறைகள் அரசு பள்ளிகளிலும் நடைமுறைபடுத்துவதில்லை. ஆனால் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது போல் உள்ளது” என்றார். இதற்கிடையே, லதா அவரது குழந்தைகளுக்கு வேறு பள்ளி கூடத்தை தேடி கண்டுபிடிக்கும் பணியை துவங்கியுள்ளார். “ ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளி கூடம் தான் எங்களுக்கு விருப்பமாக உள்ளது. அது பற்றி ஒரு சிறு குறை கூட எங்கள் குழந்தைகளிடமிருந்து வரவில்லை. இப்போது, அவர்களை நான் ஒரு அரசு பள்ளியில் சேர்த்தேன் என்றால், அவர்களை நான் ஒரு நல்ல கல்லூரியில் சேர்க்க முடியாது. எப்படி ? இந்த வழக்கை போட்டவர்களால், மிகவும் எளிதாக, 5 லட்சம் பேரையும் அரசு பள்ளியில் சேர்க்க சொல்வதற்கு முடிகிறது ? எங்களை பொறுத்தவரை, இது ஒரு படி கீழிறங்கி வருவது போன்றது. அரசு, அரசு பள்ளிகளின் வசதிகள் மற்றும் ஆசிரியர்கள் சுதந்திரமாக கற்பிக்கும் திறனை மேம்படுத்தாது வரை, நீங்கள், 746 பள்ளிகளின் மாணவர்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து அவர்களிடம் அரசு பள்ளிகளில் சமாளித்து படியுங்கள் என்று சொல்லிவிட முடியாது.” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக