விநாயகர் சிலை வைக்கிற அளவிற்கு வளர்ந்திட்டீங்களா? தலித்துக்களை விரட்டிய கோவை மக்கள்..... - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

விநாயகர் சிலை வைக்கிற அளவிற்கு வளர்ந்திட்டீங்களா? தலித்துக்களை விரட்டிய கோவை மக்கள்.....


கோ வை மாவட்டத்தில், விநாயகர் சிலை வைத்து வழிபட்டதற்காக கொடூர தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் பெரிய தடாகம் பகுதி தலித் மக்கள். ' மேளம் அடிக்கக் கூப்பிட்டார்கள். போகாததால் வீடு புகுந்து எல்லோரையும் அடித்து நொறுக்கினார்கள்' என கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளனர் மக்கள்.  
அனுவாவி சுப்பிரமணிய சாமி கோவில் அருகிலுள்ள பெரியதடாகம் பகுதியில் பாரதிபுரம் என்ற பகுதி உள்ளது. செங்கல் சூளைகளில் வேலை பார்க்கும் 300 தலித் குடும்பங்கள் வசிக்கின்ற பகுதி இது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முதல்முறையாக விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்தியுள்ளனர். இதை அந்தப் பகுதியில் உள்ள மாற்று சாதிக்காரர்கள் விரும்பவில்லை. இதையடுத்து, கடந்த 5-ம் தேதி நள்ளிரவில் தலித் குடியிருப்புகளுக்குள் புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். 
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது துடியலூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும், போலீஸார் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், இன்று காலை கோவை கலெக்டர் ஹரிஹரனை சந்தித்துப் புகார் மனு கொடுத்துள்ளனர்.  
இதுகுறித்து நம்மிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அஸ்ரப் அலி, " இந்து முன்னணி அமைப்பின் சார்பில் தலித் மக்கள் விநாயகர் சிலையை வைத்ததை, மற்ற சமூகத்து ஆட்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்களும் இந்து முன்னணி சார்பில் விநாயகருக்கு சிலை வைத்து வழிபட்டிருக்கிறார்கள். பூஜையின்போது மேளம் அடிப்பதற்காக தலித் மக்களை அழைத்துள்ளனர். அதற்கு இவர்களோ, ' நாங்களும் விநாயகர் சிலை வச்சிருக்கோம் சாமி. மேளம் அடிக்க இருக்கறதால உங்க கோவிலுக்கு வர்றது கஷ்டம்' என்று சொல்லியிருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த ஊர் இளைஞர்கள் ஐம்பது பேர், உருட்டுக் கட்டைகளோடு வீடு புகுந்து அடித்துள்ளனர். பலருக்கும் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. வீட்டின் கதவுகளும் உடைக்கப்பட்டுள்ளன. ' உங்களுக்கெல்லாம் விநாயகர் சிலை ஒரு கேடா? அந்தளவுக்கு வளர்ந்துட்டீங்களா?' எனச் சொல்லி சொல்லி அடித்துள்ளனர். 
இந்தப் பகுதி தலித் மக்கள் அடிவாங்குவது ஒன்றும் புதிதல்ல. தலித் மாணவர்கள் பள்ளிக்குப் படிக்கச் சென்றாலே நேரில் அழைத்து, சோர்ந்து போய் விழும் வரையில் அடித்து நொறுக்குகின்றனர். எதிர்த்துப் பேசியவர்கள் யாரையும் அவர்கள் விட்டுவைப்பதில்லை. விநாயகர் சதுர்த்தி அன்று நடந்த தாக்குதலுக்காக போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்துள்ளனர். புகாரை மட்டும் வாங்கிவிட்டு, தலித் மக்களை திருப்பி அனுப்பிவிட்டனர். கலெக்டரிடம் புகார் கொடுத்த பிறகு, ஸ்டேசனில் வைத்து கட்டப் பஞ்சாயத்து நடத்துகின்றனர் துடியலூர் போலீஸார். தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யும் வரையில் நாங்கள் ஓயப் போவதில்லை" என்றார் கொந்தளிப்போடு.

நன்றி விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here