தனியார் பள்ளிகளுக்கு இணையாக செயல்படும் அரசுப்பள்ளி -மேலப்பட்டி நாமக்கல் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தனியார் பள்ளிகளுக்கு இணையாக செயல்படும் அரசுப்பள்ளி -மேலப்பட்டி நாமக்கல்

நன்றி : தீக்கதிர் நாளிதழ்
(நாள் : 21.09.2016)

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
தனியார் பள்ளிகளுக்கு இணையாக செயல்படும் அரசு பள்ளிக்கு பெற்றோர்கள் வாகனங்கள் ஏற்பாடு செய்து குழந்தைகளை அனுப்பி வருகின்றனர்.நாமக்கல் அருகே என்.புதுப்பட்டி ஊராட்சியில் உள்ள மேலப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நான்கு வகுப்பறைகள் மற்றும் 3 ஆசிரியர்களுடன் செயல்பட்டு வரும் இப்பள்ளியில் 50 மாணவிகள் உள்ளிட்ட 95 பேர் பயின்று வருகின்றனர்.மேலப்பட்டி கிராமத்தின் குழந்தைகள் எண்ணிக்கை சுமார் 30 மட்டுமே. இப்பள்ளியின் செயல்பாட்டால் ஈர்க்கப்பட்ட லத்துவாடி மற்றும் புதுப்பட்டி கிராமத்தினர் ஒரு வாகனம் ஏற்பாடு செய்து தங்கள் குழந்தைகளை இப்பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர்.

இதற்கான காரணம் குறித்து தலைமை ஆசிரியர் அண்ணாதுரையிடம் கேட்ட போது, பாடத்திட்டத்திற்கு அப்பால் பொது அறிவை வளர்க்க வேண்டும் என தமிழ் மற்றும் ஆங்கிலம் செய்தித் தாள்கள் வாங்கி மாணவ, மாணவிகளை வாசிக்கச் செய்கிறோம். தமிழ், ஆங்கிலம் பேசவும், எழுதவும் சிறப்பு பயிற்சிகள் வழங்குகிறோம். பொது அறிவை வளர்த்துக் கொள்ள தாழ்வார நூலகம் அமைத்துள்ளோம். சுய சேவை நியாய விலைக்கடை ஒன்றும் வகுப்பறையில் செயல்படுகிறது. மாணவர்கள் தங்களுக்குத் தேவையான எழுது பொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு அதற்குண்டான பணத்தைப் போட்டு வைக்கின்றனர்.

தபால் நிலையம் இங்கு செயல்படுகிறது. சக மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் தங்கள் கருத்துக்களை கடிதம் மூலம் அனுப்பி வருகின்றனர். மாணவர்களின் படைப்பாற்றலை வெளியில் கொண்டு வரும் வகையில் குதூகலம் என்ற மாதாந்திர கையெழுத்துப்பிரதி நடத்தப்படுகிறது. 16 பக்கங்கள் கொண்ட இவ்விதழில் சிறுகதை, பழமொழி, விடுகதை, தலைவர்கள் வரலாறு, முக்கிய தினங்கள் இடம் பெறும். இதன் ஆசிரியரும். படைப்பாளிகளும் மாணவ, மாணவிகளே. இதனை ரூ.10 சந்தா செலுத்தி அருகிலுள்ள பள்ளியினரும் வாங்கிச் செல்கின்றனர்.

மேலும், பெற்றோர் ஆசிரியர் கழக உதவியுடன் ஓவியம், நடனம், யோகா பயிற்சிக்கு இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள ஒரு டிரஸ்டின் உதவியுடன் தினமும் மாலையில் பால் மற்றும் பிஸ்கட், பயறு வகைகள் வழங்குகிறோம்.வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை பள்ளி சட்ட மன்றம் கூடும், சபாநாயகர், முதல்வர், அமைச்சர் பெருமக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மாணவ, மாணவிகளே. அரசுப் பள்ளியின் இதுபோன்ற செயல்பாடுகளால் பயிலும் மாணவ, மாணவிகள் உற்சாகமாகப் பள்ளிக்கு வந்து பயில்வதோடு, அருகிலுள்ள சற்று வசதியான பெற்றோர்களும் தனியார் பள்ளியிலிருந்து இப்பள்ளியில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்துள்ளனர் என்றால் மிகையல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here