அரசுப் பள்ளிகளின் சிறப்புகள், அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களைத் தாங்கிய இணையதளம் தொடங்கப்படவிருப்பதாகப் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நிசப்தம் டிரஸ்ட் மூலம், தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பள்ளிகளுக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் உதயசந்திரனோடு ஆசிரியர்கள் கலந்துரையாடலும் நடந்தது. அதில் ஓர் ஆசிரியர், 'அரசுப் பள்ளிகளுக்கு என வலைதளம் உருவானால், அதில் தங்கள் பள்ளியின் நிகழ்ச்சிகளைப் பதிவதற்கு வசதியாக இருக்குமே" என்று கேட்டார்.
ஆசிரியரின் கேள்விக்கு உதயச்சந்திரன் பதிலளிக்கும்போது, "நீங்கள் சொல்வது மிகவும் நல்ல யோசனை. அதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வேலையும் நடந்துவருகிறது. அதில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும், ஒவ்வோர் ஒன்றியத்துக்கும், ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனிப் பக்கம் எனத் திட்டமிட்டிருக்கிறோம். மிக விரைவில் அந்த இணையதளம் செயல்பாட்டுக்கு வரும். அப்போது அரசுப் பள்ளியின் சிறப்புகள் உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் தமிழர்களின் பார்வைக்கு முன் வைக்கப்படும்" என்றார்.
அரசுப் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவும்விதமான அறிவிப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் இந்தச் சூழலில் இந்தத் தகவல் ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியோடு பேசப்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக