காப்பி அடிப்பது, தேர்வில் ஆள் மாறாட்டம் செய்வது என பிரபலமாக இருந்து வருகிறது பிகார் மாநிலம். 2 ஆண்டுகளுக்கு முன்பு அம்மாநில பள்ளி ஒன்றில் பொதுத் தேர்வு நடைபெற்ற போது நூற்றுக்கணக்கானோர் மாடியில் ஏறி நின்று மாணவர்களுக்கு பிட் எழுதிக் கொடுத்த வீடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் அந்தத் தேர்வில் பலர் தோல்வி அடைந்தனர்.
இவ்வாறு கல்வியில் பின் தங்கியுள்ள பிகார் மாநிலம், இந்த ஆண்டு நீட் தேர்வில் முதலிடம் பிடித்தது. ஆனால், அதிலும் சர்ச்சை எழாமல் இல்லை. பிகார் மாணவி கல்பனா முதலிடம் பிடித்த நிலையில், அவருக்கு போதுமான வருகை பதிவு இல்லை என்ற போதிலும் பொதுத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டிருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டுக்கே இன்னும் விடை கிடைக்காத நிலையில், தற்போது பிகார் மாநில கல்வித் துறைக்கு எதிராக மற்றொரு சர்ச்சை கிளம்பியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. மொத்தம் 12 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தோல்வி அடைந்தனர்.
இந்நிலையில் மொத்த மதிப்பெண்களை விட அதிகமான மதிப்பெண்கள் சில மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அம்மாநிலத்தில் உள்ள ஆர்வால் மாவட்டத்தைச் சேர்ந்த பீம் குமார் என்ற மாணவருக்கு இயற்பியல் செய்முறை தேர்வில், 35 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற தேர்வில் 38 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. “இது எனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. காரணம் இது போன்று ஏற்கெனவே நிகழ்ந்துள்ளது என்று பீம் குமார் தெரிவித்தார்.
வேதியியலில் சந்தீப் ராஜ் என்ற மாணவருக்கு செய்முறை தேர்வில் மொத்த மதிப்பெண்ணான 35 க்கு 39 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதேபோல ஜான்வி சிங் என்ற மாணவி உயிரியல் தேர்வுக்கு செல்லவேயில்லை. ஆனாலும்,அவருக்கு உயிரியல் பாடத்தில் 18 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.
பிகாரில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கிய பள்ளி கல்வி வாரியத்தின் இந்தக் குளறுபடி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக