ஆபத்திலிருந்து இந்திய நகரங்கள் மீண்டு வருவது எளிதான ஒன்றல்ல என சிட்டி ரிஸ்க் இன்டக்ஸ் ஆய்வறிக்கை கூறியுள்ளது.
இதுகுறித்து இந்த ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: 'உலக அளவில் தீவிரவாதத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வாய்ப்புள்ள முதல் 10 நகரங்களில் இந்தியாவின் டெல்லி, மும்பை, பெங்களூரு ஆகிய மெட்ரோ நகரங்களும் உள்ளன. இந்தப் பட்டியலில் பாகிஸ்தானின் கராச்சியும் முதல் பத்து இடங்களுக்குள் உள்ளது. உலகின் முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான தாய்லாந்தும் தீவிரவாதத் தாக்குதல்களை எதிர்கொள்கிறது. தொற்று நோய்த் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்படும் நகரமாக ஷாங்காய் உள்ளது.
அதேபோல சைபர் தாக்குதல்கள் மற்றும் இயற்கைப் பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படும் நகரங்களின் பட்டியலில் ஜப்பான் நாட்டின் நகரங்கள் முன்னிலையில் உள்ளன. இவ்வாறு பாதிக்கப்படும் உலகின் 19 நகரங்கள் அவற்றிலிருந்து மீண்டுவர மிகவும் தாமதமாகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் டெல்லி, மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்கள் ஆபத்திலிருந்து மீண்டுவருவது எளிதாக நடப்பதில்லை' என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு உலகம் முழுவதும் உள்ள 279 நகரங்களில் நடத்தப்பட்டது. இதில் ஆசியாவில் மட்டும் 92 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு மோதல்கள், தீவிரவாதம், இயற்கைப் பேரிடர்கள், சந்தைக் காரணிகள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட 22 காரணிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக