டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக வந்த ஷிகர் தவன் (107), முரளி விஜய் (105) இருவருமே சதமடித்து அசத்தினர். பின்னர் வந்த லோகேஷ் ராகுல் 64 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து அகமத்ஸாய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து கேப்டன் அஜின்க்ய ரஹானே 10 ரன்களிலும், புஜாரா 35 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த தினேஷ் கார்த்திக் 4 ரன்களில் ரன்அவுட் ஆகி ஏமாற்றமளித்தார்.
முதல்நாள் ஆட்டநேர இறுதியில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்திருந்தது. ரவிச்சந்திரன் அஷ்வின் 7 ரன்னுடனும், ஹர்திக் பாண்டியா 10 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
டி20களில் அச்சுறுத்தலான சுழற்பந்துவீச்சு படையைக் கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, இந்த டெஸ்டில் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடக்க வீரர்கள் தவன், விஜய் இருவரும் எந்தச் சிக்கலும் இல்லாமல் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து அசத்தியதால் இந்திய அணி தற்போது வலுவான நிலையை எட்டியுள்ளது.
இந்தப் போட்டியில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் இந்தியா - ஜிம்பாப்வே ஆடிய வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணியில் இடம்பிடித்திருந்த ஆன்டி பைக்ராஃப்ட் இந்த போட்டியில் நடுவராக பணியாற்றி வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக