நிலக்கடலையைக் கொள்முதல் செய்வதில் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு (நஃபெட்) முறையாகச் செயல்படவில்லை என்று குஜராத் மாநில வேளாண் துறை அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால் இக்கூட்டமைப்போ குஜராத் மாநில அரசுதான் கொள்முதல் பணியில் ஏற்பட்ட பின்னடைவுக்குக் காரணம் என்று புகார் கூறுகிறது.
கொள்முதல் மையங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளின் அதிகாரிகள் தங்களது பணியைச் சரியாக மேற்கொள்ளவில்லை என்று இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பின் தலைவரான வி.ஆர். படேல் கூறியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, குஜராத் மாநில வேளாண் துறை அமைச்சரான ஆர்.சி.ஃபால்து, அகமதாபாத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசுகையில், “நிலக்கடலை கொள்முதல் பணிகள் கடந்த எட்டு மாதங்களாக நடந்து வருகின்றன. இதுவரையில் மாநில அரசு கொள்முதல் பணிகளில் ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டதாக எந்தவொரு புகாரும் இல்லை. ஆனால், இப்போது திடீரென மாநில அரசின் ஏஜென்சி நிறுவனங்களையும், அவற்றின் அதிகாரிகளையும் குறைகூறுவது தவறான செயலாகும். நஃபெட் தலைவர் தனது தவறை மறைப்பதற்காக இதுபோன்ற போலியான குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
நிலக்கடலை அறுவடை முடிந்து சந்தைக்கு வரத்து தொடங்கியபோதே நஃபெட் போதிய அளவிலான கொள்முதல் மையங்களைத் திறக்கவில்லை எனவும், அப்போது மாநில அரசு தலையிட்டு உள்ளூர் ஏஜென்சிகளைக் கொண்டு கொள்முதல் மையங்களை அமைத்தவுடன் அதில் முறைகேடு இருப்பதாகக் கூறுவது கண்டிக்கத்தக்கது எனவும் ஃபால்து கடுமையாகச் சாடியுள்ளார். 2017 டிசம்பர் மாதம் தேர்தலை முன்னிட்டு குஜராத் மாநில அரசு அவசர அவசரமாகத் தகுதியற்ற ஏஜென்சிகளைக் கொண்டு கொள்முதல் மையங்களைத் திறந்ததாக நஃபெட் தலைவர் குற்றஞ்சாட்டுகிறார். இந்த ஏஜென்சிகள் கொள்முதல் பணிகளை முறையாகக் கண்காணிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக