முதியோருக்கு முன்னுரிமை: முதலமைச்சர்! ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15ஆம் தேதியை முதியோருக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினமாக அனுசரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்றும், அதனை - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

முதியோருக்கு முன்னுரிமை: முதலமைச்சர்! ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15ஆம் தேதியை முதியோருக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினமாக அனுசரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்றும், அதனை

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15ஆம் தேதியை முதியோருக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினமாக அனுசரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்றும், அதனைச் செயல்படுத்தும் வகையில் அனைவரும் முதியோர்களைப் பாதுகாக்கும் வகையிலான உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

ஐக்கிய நாடுகள் சபையானது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15ஆம் தேதியை முதியோருக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினமாக அனுசரித்து வருகிறது. அந்த வழியில், இந்த ஆண்டு முதல் முதியோருக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை அனுசரிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதனையொட்டி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஜூன் 14) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில், முதுமை என்பது தவிர்க்க இயலாதது என்றும், முதுமையை மதித்தலே ஆரோக்கியமான சமூகத்தின் அடையாளம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“முதுமை என்பது இன்னொரு குழந்தை பருவம். முதியோர் நம்மிடம் எதிர்பார்ப்பது உண்மையான அன்பையும் பாசத்தையும் மட்டுமே. வாழ்க்கையின் மேடுபள்ளங்களைக் கடந்து களைத்த பாதங்களைத் தழுவுதல் இளையவர்களின் தலையாய கடமையாகும்” என்று அவர் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

முதியோர் நலனில் அக்கறை செலுத்திவரும் தமிழக அரசினால், சுமார் 15.50 லட்சம் ஆதரவற்ற முதியோர்கள் மாதந்தோறும் ஓய்வூதியமாக ரூ.1000 பெறுவதாகத் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. மூத்த குடிமக்களுக்கான இலவச அரசு பேருந்து பயணச் சலுகையினால் 3.12 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாகவும், அரசு முதியோர் இல்லங்களில் முதியோருக்கான உணவு மானியம் 300 ரூபாயிலிருந்து 1200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், முதியோருக்கு நிமோனியா தடுப்பூசி மருந்து அளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு 1.65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். முதியோருக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை அனுசரிக்கும் வகையில் அனைத்து பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு உறுதிமொழி வாசிக்க ஏற்பாடு செய்துள்ளது தமிழக அரசு.

“முதியோரைக் குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன் எனவும், மனோரீதியாகவும் உடல்ரீதியாகவும் காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன் எனவும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன் என்றும் பொது இடங்களான மருத்துவமனை, வங்கி, பேருந்து போன்ற இடங்களில் முதியோருக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கெதிரான கொடுஞ்செயல்கள், வன்முறைகள் எவ்விதத்திலும் இழைக்கப்படுவதினைத் தடுத்திட பாடுபடுவேன்” என அனைவரும் உறுதி மொழி எடுக்க வேண்டுமென தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

கடந்த மாதம் கன்னியாகுமரி மாவட்டத்தில் வயது முதிர்ந்த கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்துகொண்டனர். முதியோர் இல்லத்தில் சேர்க்க அவரது வாரிசுகள் முடிவு செய்தநிலையில், யாருக்கும் பாரம் இல்லாமல் இருக்க வேண்டுமென்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்த கொடூரம் நிகழ்ந்தது. இது தமிழகமெங்கும் முதியோர் நலன் குறித்த பலத்த கேள்விகளை எழுப்பியது. இந்த நிலையிலேயே, முதியோருக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை அனுசரிக்க வேண்டுமென்ற தமிழக அரசின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here