தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் விதிகளை மீறிக் கூடியதாக 1720 பேர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும், மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் கடந்த 18ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்குத் தூத்துக்குடி போலீசார் அனுமதி மறுத்திருந்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதியுடன் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியை மாலை 6 மணிக்குத் தொடங்கி 8 மணிக்குள் முடிக்க வேண்டும், 1000 பேருக்கு மேல் கூட்டக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை மீறி பொதுக்கூட்டம் நடத்தியதாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த மாவட்டச் செயலாளர் கே.எஸ். அர்ச்சுனன் மீதும், பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் மீதும் தென்பாகம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கைக் காவல் துறை உள்நோக்கத்தோடு பதிவு செய்திருக்கிறது. இதனை ரத்து செய்ய வேண்டும் என கே.எஸ்.அர்ச்சுனன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை இன்று (ஜூன் 21) விசாரித்த நீதிமன்றம் 1720 பேர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு நடவடிக்கையைக் கைவிடப்பட்ட அறிக்கையை இரண்டு வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் முன் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக