ஆசிரியர் வேறுபள்ளிக்கு மாற்றம் செய்த உத்தரவு , மாணவர்கள் கண்ணீரால் தடுத்து நிறுத்தப்பட்டது. - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஆசிரியர் வேறுபள்ளிக்கு மாற்றம் செய்த உத்தரவு , மாணவர்கள் கண்ணீரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளியகரம் அரசு உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டதால், மாணவர்கள் ஆசிரியரைக் கட்டிப்பிடித்து கண்ணீர் விட்ட நிலையில், ஆசிரியரின் பணியிட மாற்ற உத்தரவை மாவட்ட கல்வி அதிகாரி நிறுத்தி வைத்துள்ளதாக இன்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெள்ளியகரம் அரசு உயர் நிலைப் பள்ளியில் 260 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் ஆங்கிலப் பாடத்திற்கான ஆசிரியர்களாகப் பகவான் மற்றும் சுகுணா ஆகிய இருவரும் பணியாற்றி வந்துள்ளனர்.

தற்போது, தமிழக அரசு, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமித்தும், கூடுதலாக உள்ள ஆசிரியர்களை, குறைந்த ஆசிரியர்கள் உள்ளப் பள்ளிக்கு இடமாற்றம் செய்து வருகிறது. இந்நிலையில், அரசு விதிகளின் படி இந்தப் பள்ளியில் 250 மாணவர்களுக்கு கூடுதல் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அதனடிப்படையில் பகவான் மற்றும் சுகுணா ஆகிய இருவரையும் அரசு இடமாற்றம் செய்து உத்தரவிட்டது.

இதனையறிந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நேற்று (ஜூன் 20) ஆசிரியரைப் பணியிடை மாற்றம் செய்யக் கூடாது என்று கூறி பள்ளிக்குப் பூட்டுப் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பள்ளிப்பட்டு வட்டாட்சியர் லட்சுமி, சம்பவ இடத்திற்கு நேரில் வந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையில், ஒரு வாரக் காலத்திற்குள் நல்ல முடிவு தெரிவிக்கப்படும் என வட்டாட்சியர் தெரிவித்தார். இதனால் கோபமடைந்த மாணவர்களின் பெற்றோர்கள், எங்கள் பிள்ளைகளை ஒரு வாரத்திற்குப் பிறகு நாங்கள் பள்ளிக்கு அனுப்புகிறோம் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் ஆசிரியர் பகவான் நேற்று , பணியிட மாற்றம் உத்தரவு நகலை வாங்குவதற்காக பள்ளிக்கு வந்துள்ளார், அப்போது அனைத்து மாணவர்களும் ஆசிரியர் பகவானின் காலை பிடித்துக் கொண்டு இங்கிருந்து நீங்கள் செல்லக்கூடாது, நீங்கள் பாடம் நடத்தினால்தான், நாங்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவோம் என்று சொல்லிக் கொண்டே கதறி அழுதுள்ளனர். மாணவர்கள் கதறி அழுத காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்த நிலையில், ஆசிரியரின் பணியிட மாற்ற உத்தரவை மாவட்ட கல்வி அதிகாரி நிறுத்தி வைத்துள்ளதாக இன்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here