கொண்டு கதறினார்கள்.
கிம் ஜாங்-இல்லின் 27 வயது மகன் கிம் ஜோங்-உன் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்த நிலையில் காருடன் நடந்து வந்தார். அந்த இறுதிவிழாவில் அவர் பல முறை உணர்ச்சி பொங்க கண்ணீர் வடித்தார்.
அந்த காலகட்டத்தில் வட கொரியா தலைவர்களில் அதிகாரத்தில் இரண்டாவது இடத்தில் இருந்தவராக கருதப்படும் தனது மாமா சங்க் சாங்-தயேக் ஒருபுறமும், மறுபுறத்தில் ராணுவத் தலைமை தளபதி ரி யோங்-ஹோ மற்றும் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங்-சுன் புடைசூழ இறுதி ஊர்வலத்தில் நடந்து சென்றார் கிம் ஜோங்-உன்.
1950களில் கிம் ஜோங்-உன்னின் தாத்தா கிம் இல்-ஸங் கம்யூனிஸ்ட் உலகில் தனித்துவமான தலைமையை உருவாக்கினார், அதுதான், வட கொரியாவின் ஒருநபர் தலைமை.
1994 ஆம் ஆண்டில், கிம் இல்-ஸங் இறந்ததும், கிம் ஜாங்-இல் உடனடியாக பொறுப்பேற்றார். ஆனால் 2011இல் அவர் திடீரென்று இறந்துவிட, அவரது மகன் கிம் ஜோங்-உன் வட கொரியாவின் மூன்றாவது உச்ச தலைவராக பதவியேற்றார்.
கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கால அரசியல் அனுபவம் பெற்றிருந்த கிம் ஜாங்-இல் எங்கே, வெளிநாட்டில் படித்து, சில ஆண்டுகளுக்கு முன் வட கொரியாவுக்கு திரும்பி வந்த அரசியல் அனுபவம் இல்லாத கிம் ஜோங்-உன் எங்கே? எனவே, ஒற்றை தலைமை முறை வட கொரியாவில் முடிவுக்கு வந்துவிடும் என பல நிபுணர்கள் ஒத்த கருத்துகளை தெரிவித்தனர்.
ஆனால் அனைத்தையும் பொய்யாக்கிய கிம் ஜோங்-உன், சில மாதங்களுக்குள் தலைமை நிர்வாக அதிகாரி யோங்-ஹோ மற்றும் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங்-சுன் ஆகிய இருவரையும் பதவிநீக்கம் செய்தார். ரி யோங்-ஹோ எங்கு இருக்கிறார் என்பது இன்றும் புதிராகவே இருக்கிறது.
2013 டிசம்பர் மாதத்தில் கிம் ஜோங்-உன் யாருமே எதிர்பாராதவிதமாக ஒரு அதிர்ச்சிகரமான செயலை செய்தார். தனது மாமா சங்க் சாங் தயேக் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தி அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றினார். விமான எதிர்ப்பு துப்பாக்கியால் சுடப்பட்டு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.
தனது தாத்தாவின் காலத்திற்கு பிறகு, 2012 மற்றும் 2016 ஆண்டுகளுக்கு இடையில் நாட்டில் மிகப்பெரிய சுத்திகரிப்பு நடவடிக்கைகளை கிம் ஜோங்-உன் மேற்கொண்டார் என தென் கொரிய தேசிய பாதுகாப்பு மூலோபாய நிறுவனம் கூறுகிறது.
மூத்த ராணுவ அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள் என 140 பேருக்கு கிம் ஜோங்-உன் மரணதண்டனையை நிறைவேற்றியிருப்பதாகவும், கிட்டத்தட்ட 200 பேரை பதவிகளில் இருந்து அகற்றினார் அல்லது அவர்களை சிறையில் அடைத்தார் என்றும் தென் கொரிய தேசிய பாதுகாப்பு மூலோபாய நிறுவனம் கூறுகிறது.
தனது பாதையில் குறுக்கிடும் எவராக இருந்தாலும் அவர்களை பிரத்யேகமான தனது பாணியில் அகற்றும் கிம், இளைஞர்களாகவோ அனுபவம் இல்லாதவர்களாகவோ இருந்தாலும்கூட தனக்கு விசுவாசமாக இருப்பவர்களை பதவியில் அமர்த்துவார்.
இதற்கு உதாரணமாக, கிம்மின் உடன்பிறந்த சகோதரி 30 வயது கிம் யோ-ஜோங் 2017 இல் பொலிட்பீரோ தலைவராக நியமிக்கப்பட்டதைக் கூறலாம்.
தற்போது அதிகாரத்தை கட்டுப்படுத்தும் மந்திரக்கோல் இருப்பது யாரிடம் என்ற சந்தேகம் பியோங்யாங்கில் யாருக்குமே எள்ளவும் கிடையாது. கிம் ஜோங்-உன் என்ற உச்ச தலைவரே வட கொரியா என்று கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பமே அதனை வெளிப்படுத்துகிறது.
1992ஆம் ஆண்டு பியோங்கியாங்கில் எட்டு வயது சிறுவனான கிம் ஜோங்-உன் பிறந்தநாளில் அவருக்கு கொடுக்கப்பட்ட பரிசுகளில் ஒன்று
ஒரு ராணுவத் தலைவருக்கான உடையின் சிறிய அளவிலானது.
பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வந்த பல முதியவர்களும், ராணுவத்தின் மூத்த தளபதிகளும் அந்த எட்டு வயது சிறுவனுக்கு மரியாதை கொடுத்து, வணக்கம் சொன்னார்கள்.
எட்டு வயது சிறுவன் "ஜெனரல் கிம்" ஆனது பற்றிய கதையை அவருடைய அத்தை 2016ஆம் ஆண்டு வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு வழங்கிய ஒரு பேட்டியில் கூறியிருந்தார். கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் கோ யங்-சக் மற்றும் அவரது கணவர் மேற்கத்திய நாட்டிற்கு வந்தார்கள். தற்போது அவர்கள் நியூயார்க்கிற்கு வெளியே அமைதியாக தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
தனது தந்தை கிம் ஜாங்-இல்லுக்கு பிறகு ஆட்சி அதிகாரத்திற்கு வருவது கிம் ஜோங்-உன் என்பதை அந்த பிறந்தநாள் விழா உறுதி செய்ததாக குறிப்பிடுகிறார் கோ.
"அவரை சுற்றியுள்ளவர்கள் அவரை இப்படி மரியாதையாக நடத்தும்போது சாதாரண மனிதனாக வளர்வதற்கான சாத்தியங்கள் கிம் ஜோங்-உன்னுக்கு குறைந்து போனது" என்கிறார் கோ.
சில ஆண்டுகளுக்கு பின்னர் சுவிட்சர்லாந்தில் கல்வி பயில கிம் ஜோங்-உன் அனுப்பப்பட்டபோது, அவருக்கு பாதுகாப்பாக அத்தை கோ யாங்-சுக் அனுப்பி வைக்கப்பட்டார்.
இளம் வயது கிம், ஆங்காரத்துடனும், மிக்க கோபம் மிக்கவராகவும் இருந்ததாக அவரது அத்தை கோ தெரிவித்தார்.
கோ மேலும் கூறுகிறார், "கிம் எந்த பிரச்சனையும் செய்யமாட்டார். ஆனால் கோபக்காரர், சகிப்புத்தன்மை மிகவும் குறைவு. விளையாட்டை குறைத்துக் கொண்டு, நன்றாக படி என்று அம்மா சொன்னால், அதற்கு எதிர்பேச்சு பேசாத கிம், தனது எதிர்ப்பை வேறு விதங்களில் காட்டுவார். சாப்பிட மறுத்து விடுவார்.
வட கொரியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகிறவர் கிம் ஜோங்-உன் என்ற ஆரூடத்தை முதலில் சொன்னவர் ஜப்பானின் சுஷி செஃப் கென்ஜி ஃபுயுஜிமோடோ.
1990களில், கிம் குடும்பத்திற்கு நெருக்கமானவர்களில் ஒருவராக இருந்தார் கென்ஜி. கிம் ஜாங்-இல்லுக்காக ஜப்பானிய உணவு வகைகளை தயாரித்துக் கொடுக்கும் அவர், கிம் ஜோங்-உன்னின் விளையாட்டுத் தோழர் தான் என்றும் கூறுவார்.
2001ஆம் ஆண்டில் ஜப்பானுக்குத் திரும்பிய ஃபுயுஜிமோடோ, கிம் குடும்பத்தின் கதையை புத்தகமாக எழுதினார். அதில் கிம் ஜோங்-உன் மற்றும் அவரது மூத்த சகோதரர் கிம் ஜாங்-சல் உடனான தனது முதல் சந்திப்பை விவரித்திருக்கிறார்.
"முதல் முறையாக நான் இரண்டு இளம் இளவரசர்களையும் சந்தித்தபோது, அவர்கள் இருவரும் ராணுவச் சீருடைகள் அணிந்திருந்தார்கள். அங்கிருந்த ஊழியர்களுடன் கைகுலுக்கிக்கொண்டே நடந்து வந்தார்கள். என்னை நெருங்கிய இளவரசர் கிம் ஜோங்-உன் என்னை கூர்மையாக உற்று நோக்கினார். 'உங்களைப் போன்ற ஜப்பானியர்களை வெறுக்கிறோம்' என்று அவர் சொல்ல விரும்பியதைப் போல அந்த பார்வை இருந்தது. அந்த கூர்மையான பார்வையை என்னால் என்றுமே மறக்க முடியாது. இந்த சம்பவம் நடந்தபோது அவருக்கு ஏழு வயது."
2003இல் அவர் எழுதிய இரண்டாவது புத்தகத்தில் கென்ஜி இவ்வாறு குறிப்பிடுகிறார், 'கிம் ஜோங்-சோல் வடகொரியாவின் அடுத்த வாரிசாகக் கருதப்படுகிறார். ஆனால் எனக்கு அதில் சந்தேகம் இருக்கிறது. 'கிம் ஜோங்-சோல் ஒரு பெண்ணைப் போன்றவர் அவர் ஆட்சிப் பொறுப்புக்கு பொருத்தமற்றவர் என்று கிம் ஜோங் இல் அவ்வப்போது சொல்வார். அவருக்கு மிகவும் பிடித்த மகன், இரண்டாவது இளவரசர் கிம் ஜோங்-உன். அவர் தந்தையைப்போன்ற இயல்புடையவர். அவர் தந்தையைப் போலவே உருவாக்கப்பட்டார், ஆனால் அவரைப்பற்றி பொதுமக்களிடம் சொல்லப்படவில்லை.
இது ஒரு மிக முக்கியமான தீர்க்கதரிசனம். அந்த சமயத்தில், வட கொரியா மக்களுக்கு அறிமுகமாகாதவர் கிம் ஜோங்-உன். அவரது இளமைப் பருவத்தின் பெரும்பகுதி இன்னும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது
வட கொரியாவில் இருந்து வெளியேறிய சோய் மின்-ஜுன், தென் கொரியாவில் வசிக்கிறார்.
சோயின் குடும்பத்தினர் விவசாயிகள், அவர்கள் ஜப்பானியர்களுக்கு சேவை செய்யவில்லை என்றாலும் அவர்களை எதிர்க்கவும் இல்லை. எனவே சோய் போர் பிரிவுக்கு அனுப்பப்பட்டார்.
"வட கொரியாவில், மிக இளம் வயதில் இருந்தே மூளைச்சலவை செய்யப்படுகிறீர்கள்" என்கிறார் அவர்.
"கிம் இல்-சங் அளித்த புத்தாண்டு உரையில், இந்த ஆண்டு அதிக நிலக்கரியை உற்பத்தி செய்யவேண்டும் என்று சொன்னார். உடனே 'நான் சுரங்கங்களுக்கு செல்வேன்!' என்று கூறினேன். இப்படி அப்பாவியாகவும், கிம் குடும்பத்திற்கு விசுவாசமாகவும் இருந்தேன்.
நாட்டின் உயர் தலைவரை தாங்கள் பாதுகாக்க வேண்டியது வெளிநாட்டு எதிரிகளிடமிருந்து அல்ல, ஆனால் அவர்களது சொந்த மக்களிடம் இருந்து என்று சோய் விரைவிலேயே அறிந்துக் கொண்டார்.
"கிம் குடும்பத்திற்கு, அனைவருமே சாத்தியமான எதிரிகளே" என்று அவர் என்னிடம் கூறுகிறார். "வட கொரிய ராணுவம், பொதுத் துறை பிரிவு, மக்கள் ஆயுதப்படைகளின் அமைச்சகம், மற்றும் வட கொரிய மக்கள் என அனைவருமே சாத்தியமான எதிரிகள் தான்."
பயிற்சி அளிக்கப்பட்டபோது, அவருடைய சொந்த பெற்றோர் உட்பட யாரையுமே நம்பக்கூடாது என்று கூறப்பட்டது.
"கிழக்கத்திய நாடுகளின் சரிவு மற்றும் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியைக் கண்ட கிம் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்" என்று சோய் கூறுகிறார். "அவர்கள் உச்ச தலைவரை பாதுகாக்கும் ராணுவத்தின் அளவை அதிகரித்தார்கள். தற்போது அதில் கிட்டத்தட்ட 120,000 வீரர்கள் உள்ளனர்."
ஒரு இடைக்கால அரச குடும்பத்தைப் போல, கிம் பரம்பரையும் பொறாமையை எதிர்கொள்கிறது, தன்னைச் சுற்றிலும் இருப்பவர்களை எதிரிகளாக பார்க்கிறது கிம் பரம்பரை.
மேலும் காலங்காலமாக பல அரச குடும்பங்களில் நடப்பதுபோன்றே, சில நேரங்களில் தனது நிலைமையைப் பாதுகாப்பதற்காகச் கொலையும் செய்கிறது.
வட கொரிய உச்ச தலைவர் கிம் ஜோங்-உன்னின் ஒன்றுவிட்ட அண்ணன் கிம் ஜாங்-நம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் கொடிய நச்சுத்தன்மை வாய்ந்த வி.எக்ஸ் என்ற நரம்பு மண்டலத்தைத் தாக்கும் வீரியம் மிக்க ரசாயனம் கொடுக்கப்பட்டு உயிரிழந்தார்.
அவரிடம் இருந்த பாஸ்போர்ட், அவர் வட கொரிய தூதர் கிம் சுல் என்று கூறியது. ஆனால் உண்மையில் அவர், கிம் ஜோங்-உன்னின் ஒன்றுவிட்ட அண்ணன் கிம் ஜாங்-நம்.
captionகிம் ஜாங் இல்லின் இடப்புறம் அமர்ந்திருப்பவர் அவரது மூத்த மகன்
அந்தக் கொலையில் தங்களுக்குத் தொடர்பு இல்லை என்று வடகொரியா மறுத்துள்ளது. கிம் ஜாங்-நம் மிகவும் தைரியமாக வெறித்தனமாக கொல்லப்பட்டதற்கான காரணங்களும், அனைத்து சான்றுகளும் பியோங்கியாங்கில் இருக்கும் அவரது ஒன்றுவிட்ட இளைய சகோதரரையே சுட்டிக்காட்டுகிறது. சகோதரனை அவர் ஏன் கொலை செய்யவேண்டும்? நோக்கம் என்ன?
அவர்களது தந்தை கிம் ஜாங்-இல்லுக்கு சிக்கலான காதல் வாழ்க்கை இருந்தது. அதிகாரபூர்வமாக இரண்டு மனைவிகளும், குறைந்தபட்சம் மூன்று துணைவிகளும் இருந்தனர். இந்த ஐவர் மூலம் கிம் ஜாங்-இல்லுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தனர். கிம் ஜாங்-இல்லின் முதல் துணைவி சங்-ஹை ரிம்மின் குழந்தை கிம் ஜாங்-நம். கிம் ஜாங்-இல்லின் இரண்டாவது துணைவி கோ யங்-ஹையின் மகன் கிம் ஜோங்-உன். கோ யங்-ஹை ஜப்பானில் பிறந்தவர், முன்னாள் நடிகை.
கிம் ஜாங்-இல் தனது துணைவிகளையும், அவர்களது குழந்தைகளையும் பற்றிய தகவல்களை ரகசியமாக வைத்திருந்தார். அவர்கள் ஒதுக்குப்புறமாக இருந்த வீடுகளில் தனித்தனியாக குடியமர்த்தப்பட்டு, ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளாமல் தனிமையாக வைக்கப்பட்டார்கள். கிம் ஜாங்-நம் மற்றும் கிம் ஜோங்-உன் இருவரின் தந்தை ஒருவரே என்றாலும், அவர்கள்
கிம் ஜாங்-இல்லின் மூத்த மகனான கிம் ஜாங்-நம், தந்தையின் அடுத்த வாரிசாக கருதப்பட்டார். ஆனால், டோக்கியோவின் டிஸ்னிலேண்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்த கிம் ஜாங்-நம், 2001ஆம் ஆண்டு போலி பாஸ்போர்ட்டில் ஜப்பானில் நுழைய முயற்சித்தபோது கைது செய்யப்பட்டார்.
வட கொரிய பட்டத்து இளவரசர் விமானத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டு நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது படமாக்கப்பட்டது. கிம் ஜாங்-இல்லுக்கு இது ஒருபோதும் மன்னிக்க முடியாத அவமானம். இதற்கு பிறகு கிம் ஜாங்-நம், அடுத்த வாரிசு என்ற அந்தஸ்திலிருந்து கீழிறக்கப்பட்டு, சீனாவிற்கு நாடு கடத்தப்பட்டார். இப்படித் தொடர்கிறது கதை...
ஆனால் இது முழுமையான கதையல்ல.
ஜப்பானிய பத்திரிகையாளரான யோகி கோமி மற்றவர்களைவிட கிம் ஜாங்-நம் பற்றி நன்றாக அறிந்தவர். பெய்ஜிங்கிலும் மக்காவிலிலும் கிங் ஜாங்-நம்மை பலமுறை சந்தித்த கோமி அவரது வாழ்க்கை வரலாற்றைப் பற்றி ஓரளவு தெரிந்துக் கொண்டார்.
"டோக்கியோ டிஸ்னிலேண்ட் சம்பவத்திற்கு முன்னதாகவே வாரிசு என்ற அந்தஸ்தில் இருந்து விலக்கப்பட்டதாக" கிம் ஜாங்-நம் என்னிடம் கூறினார் என்கிறார் கோமி.
1980களின் பிற்பகுதியில் சுவிட்சர்லாந்து போர்டிங் ஸ்கூலில் இருந்து கிம் ஜாங்-நம் வட கொரியா திரும்பிய பிறகு, தந்தையுடனான உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டதாக கோமி கூறுகிறார். ஒன்பது ஆண்டுகள் ஐரோப்பாவில் வாழ்க்கை அனுபவம் அவரிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
1990களில் வட கொரியா கடுமையான பஞ்சத்தால் பாதிக்கப்பட்டது, "அர்டெளஸ் மார்ச்" (Arduous March) என்று பரவலாக அறியப்பட்ட இந்த பஞ்ச காலத்தில் வட கொரியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. பொருளாதார ரீதியாக ஆதரவு வழங்கிய சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி, தொடர்ச்சியான பேரழிவு வெள்ளங்கள் போன்றவை நாட்டில் கடுமையான உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தின. நான்கு ஆண்டுகளுக்குள் நோய் பாதிப்பு மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் ஒன்று முதல் மூன்று மில்லியன் மக்கள் மரணித்ததாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.
கோமியின் கூற்றுப்படி, தனது தந்தை வட கொரியாவின் பொருளாதார முறையை மாற்றவேண்டும் என்று கிம் ஜாங்-நம் விரும்பினார். சீனா பின்பற்றும் பாணியிலான சீர்திருத்தங்களை மேற்கொள்ள விரும்பினார். மேலும் சில தனியார் சொத்துகளுக்கு அனுமதிக்கலாம், சந்தையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்றும் கருதினார்.
இது பிடிக்காத கிம் ஜாங்-இல், கிம் ஜாங்-நம் மீது கோபப்பட்டார்" என்கிறார் கோமி. "தனது எண்ணங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் அல்லது பியோங்யாங்கில் இருந்து வெளியேற வேண்டும்" என்று கிம் ஜாங்-இல், மகனிடம் கூறிவிட்டார்.
கோமியின் இந்தக் கூற்றை பத்திரிகையாளர் பிராட்லி கே மார்ட்டின் ஒப்புக்கொள்கிறார். பிராட்லி எழுதிய 'Under the Loving Care of the Fatherly Leader' என்ற கிம் வம்சத்தின் சுயசரிதையே சரியானது என்று நம்பப்படுகிறது.
"கிம் ஜாங்-நம் டிஸ்னிலேண்ட் சென்றதால் வாரிசு என்ற அந்தஸ்த்தில் இருந்து விலக்கப்படவில்லை," என்று அவர் கூறுகிறார். "அப்படித்தான் குடும்பத்தினர் அனைவரும் தவறான எண்ணத்தில் இருந்தனர். ஆனால் போலி பாஸ்போர்ட் விவகாரம் மட்டுமே கிம் ஜாங்-நம்மின் தந்தைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதாக நான் நினைக்கவில்லை. நாட்டின் கொள்கைகளை பற்றியும் அதில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தையும் பற்றி கிம் ஜாங்-நம் கூறியதை அவரது தந்தை விரும்பவில்லை." எனவே கிம் ஜாங்-நம் பெய்ஜிங்கிற்கு நாடு கடத்தப்பட்டார்.
வாரிசு உரிமையில் முதல் இடத்தில் இருந்த கிம் ஜாங்-நம் அகற்றப்பட்ட பின்னர், கிம் ஜாங்-இல்லின் இரண்டாவது மகனான கிம்-ஜோங்-சோலின் பெயரே முறைப்படி பரிசீலனை செய்யப்பட்டிருக்கவேண்டும், ஆனால் அவர் எப்போதுமே பெரிய அளவில் பேசப்படவில்லை. தனது இளைய மகன் கிம்-ஜோங்-உன்னை தேர்வு செய்தார் கிம் ஜாங்-இல்.
இது பற்றி மார்ட்டின் இவ்வாறு சொல்கிறார்: "கிம் ஜாங்-இல்லின் மகன்களில் கிம் ஜோங்-உன் தான் முரட்டுத்தனமானவர் மற்றும் புத்திசாலி".
வேறுவிதமாக கூறினால், அவர் கடுமையான தொடர் போராட்டங்களுக்கு இடையே, குடும்பத்தின் பரம்பரை கொள்கைகளை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் வெற்றி பெற்றார்.
கிம் ஜாங்-இல்லின் மரணத்திற்கு பிறகு கிம் ஜோங்-உன் பொறுப்பேற்றவுடன், அவரது அண்ணன் கிம் ஜாங்-நம்முக்கு பதற்றம் ஏற்பட்டது. தந்தையின் மரணத்திற்கு பிறகு கிம் ஜாங்-நம் திடீரென்று பாதுகாப்பற்றவராக உணர்ந்தார். 2012 ஜனவரி மாதத்தில் நான் அவருடன் கடைசியாக பேசியபோது, 'என் சகோதரரும் கிம் வம்சமும் எனக்கு எதாவது ஆபத்தை ஏற்படுத்துவார்கள்' என்ற அச்சத்தை கிம் ஜாங்-நம் வெளியிட்டார்.
கிம் ஜாங்-நம் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் இருப்பது கிம் ஜோங்-உன் என்று நம்பும் மார்ட்டின், அதற்கான காரணங்களை பட்டியலிடுகிறார்.
"கிம் ஜோங்-உன்னின் மாமா சங் சாங்-தெய்க்கின் கொலையுடன் சகோதரரின் கொலையும் ஒத்துப்போகிறது" என்று அவர் கூறுகிறார். "ஆட்சியை கவிழ்க்க மாமா சங் சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டி, அவரை கொன்றார். மேற்கத்திய செய்தி ஊடகங்களாகிய நாம் அதை புறக்கணித்துவிட்டோம்.
பிறகு அண்ணனிடமும் அதே முறையை கையாண்டார் கிம் ஜோங்-உன். நமக்கு கிடைத்தத் தகவல்களின்படி, சீனாவுக்குச் சென்ற சங், 'கிம் ஜோங்-உன்னைத் அகற்றிவிட்டு கிம் ஜாங்-நம்மை பதவியில் அமர்த்துவோம்' என்று கூறினார். 'மாமாவும் மூத்த சகோதரனும் எனக்கு எதிராக சதி செய்கிறார்கள், அவர்கள் சீனர்களுடன் உறவு கொண்டிருக்கிறார்கள்' என்று கிம் ஜோங்-உன் நினைத்தார். இது ஓரளவு ஒப்புக்கொள்ளக்கூடிய கூற்றே.
அது ஒரு தரப்பு வாதம் என்றபோதிலும், அவருடைய கருத்துகள் அனைத்தையும் மறுக்க இயலவில்லை.
கிம் ஜோங்-உன் தற்போது வட கொரியாவின் உயர் தலைவர். ஆனால் அவர் தனது சிறிய ஏழை நாட்டுக்கு என்ன செய்ய விரும்புகிறார்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக