ஞான் மேரிகுட்டி திரைப்படம் ரிலீஸாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தற்போதைய சமூகச் சூழலுக்கு மிகவும் தேவையான திரைப்படம் எனப் படம் பார்த்த அனைத்து தரப்பினரும் பாராட்டினாலும், கேரளாவைச் சேர்ந்த திருநங்கைகள் கொடுத்த பாராட்டும், புகழ்ச்சியும் இந்தப் படைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கத்தின் வெற்றியாகக் கருத வைத்திருக்கிறது.
மாற்றுப் பாலின அறுவை சிகிச்சையின் மூலம் பெண்ணாக மாறிய ஒருவரின் கதையை, அவர்களது போராட்டம் மற்றும் சமூகத்தில் அவர்களுக்கிருக்கும் மதிப்பு ஆகியவற்றை அப்பட்டமாகக் காட்டியிருக்கும் இந்தத் திரைப்படத்தைக் காண 50 திருநங்கைகள் பத்மா தியேட்டருக்கு வந்தார்கள்.
ஞான் மேரிகுட்டி படத்தில் மாற்று பாலினத்தவராக நடித்திருக்கும் ஜெயசூர்யா அணிந்த சிகப்பு நிற சேலையைப் போலவே, ஒரேமாதிரியாக சிகப்பு நிற உடைகளில் வந்தவர்கள் 50 பேரும் படத்தைத் தியேட்டரில் கண்டு ரசித்தனர். அதன்பிறகு வெளியே வந்தவர்கள் “படத்தில் காட்டப்பட்டிருப்பது போலவே, எங்களது இனக்குழு பல பிரச்சினைகளை இந்தச் சமூகத்தில் சந்திக்கிறது. எங்களை இந்தச் சமூகம் பார்க்கும் பார்வையை ஞான் மேரிகுட்டி திரைப்படம் மாற்றும் என நம்புகிறோம். இந்த உலகத்தில் வாழும் ஒவ்வோர் உயிரின் தனி உரிமைகளைப் பற்றி இயக்குநர் கேள்வி எழுப்புவது இப்போது மிகத் தேவை. எங்களைப் பற்றி இவ்வளவு சரியான அளவுக்கு புரிந்துவைத்திருந்து, இந்தப் படத்தை எடுக்க உதவியாக இருந்த ஜெயசூர்யா சேட்டனுக்கு நன்றி” என்று கூறியிருக்கிறார்கள்.
“மாற்றுப் பாலினத்தவர்களைப் பற்றி என் படம் பேசியிருந்தாலும், ஆண்-பெண் என தனிப்பட்ட அனைத்து மனிதர்களுக்குமான திரைப்படமாகவே இதனைப் பார்க்க வேண்டும். இந்தப் படத்தை LGBTQ சமூகத்துக்குச் சமர்ப்பிக்கிறேன்” என திருநங்கைகளின் வாழ்த்தில் மகிழ்ந்த ஜெயசூர்யா தெரிவித்திருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக