அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் பகவானுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹிர்த்திக் ரோஷன் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம் , வெளியகரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில், ஆங்கிலப் பாடத்திற்கு ஆசிரியராக உள்ள பகவான் கடந்த 2014ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 260 மாணவ மாணவிகளுக்கு ஆங்கிலம் பயிற்றுவித்து வந்தார். ஆசிரியர் பகவான் மாணவர்களிடம் ஆசிரியராக மட்டும் இல்லாமல் பாசமான தோழனாகவும் பழகியுள்ளார். இதேபோல் அந்த பள்ளி மாணவர்களும் நண்பர்களாகவே ஆசிரியர் பகவானிடம் பழகியுள்ளனர்.
இந்நிலையில் ஆசிரியர் பகவான் பள்ளிப்பட்டு அரசு உயர்நிலை பள்ளியில் சேர்ந்து நான்கு ஆண்டுகளை கடந்து விட்டதால் இந்த பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு அரசு சார்பில் பணியிட மாறுதலுக்கான ஆணை வந்தது. இதையடுத்து பணியிட மாறுதல் பெற்று சென்ற ஆசிரியர் பகவானை பள்ளியை விட்டு செல்ல வேண்டாம் எனக் கூறி அவரை மாணவர்கள் கட்டிபிடித்து கதறி அழுதனர். இச்சம்பவம் அனைவரின் மனதையும் நெகிழச்செய்தது.இச்சம்பவத்தை அடுத்து அவரது பணியிட மாற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, ஆசிரியர் பகவானுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் திரை பிரபலங்கள் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் ஹிர்த்திக் ரோஷன் ஆகியோர் ஆசிரியர் பகவானுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளனர்.நடிகர் ஹிர்த்திக்ரோஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பதிவில் , “ ஆசிரியருக்கும் ,மாணவருக்கும் உள்ள இந்த பாசப்பிணைப்பு என் நெஞ்சை உருக்குகிறது “ என தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பதிவில் , ஆசிரியர் பகவான் குறித்து வெளியான செய்தியை பதிவிட்டு ”குரு , சிஷ்யர்கள் என பதிவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக