ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்களுக்கான ஊதியம் ரூ.14 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், செவிலியர்கள் இடமாறுதல் கவுன்சலிங் விரைவில் ஆன்லைனில் நடத்தப்படும் என்றும் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று சுகாதாரத் துறை மானிய கோரிக்கை மீது நடந்த விவாதம்:
ஆர். மாசிலாமணி (திமுக):
உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தல்படி ஆயிரம் மக்களுக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும். ஆனால், 5 ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் கூட தற்போது இல்லை.
அரசு மருத்துவமனைகளில் 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மருத்துவர்கள் உள்ளனர்.
தனியார் மருத்துவமனைகளில் 50 ஆயிரம் மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர்.
எனவே, கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.
செவிலியர்களைப் பொறுத்தவரை ஒப்பந்த அடிப்படையில் ரூ.7 ஆயிரம் சம்பளத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் வழங்க வேண்டும். அவர்களுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடத்தப்பட வேண்டும்.
*அமைச்சர் சி.விஜயபாஸ்கர்*
நாட்டின் மற்ற மாநிலங்களில் 10 ஆயிரம் மருத்துவர்கள் கூட இல்லாத நிலை உள்ளது.
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 10,688 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 9,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவர்களைப் பொறுத்தவரை தேசிய அளவில் 10 ஆயிரம் மக்களுக்கு 6 பேரும் தமிழகத்தில் 8 பேரும், சென்னையில் 18 பேரும் உள்ளனர்.
ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களுக்கு ஊதியமானது ரூ.7 ஆயிரத்தில் இருந்து இருமடங்காக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
செவிலியர்களுக்கான ஆன்லைன் கவுன்சலிங்குக்கு மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் ஆன்லைன் கவுன்சலிங் அறிமுகப்படுத்தப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக