பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு எதிரான குற்றங்களிலிருந்து, அவர்களைப் பாதுகாக்கும் வகையில் சென்னையைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் புதிய கருவி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்.
சென்னை, மதுரை உட்பட தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இவற்றைத் தடுக்க காவல் துறையினர் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் அவை குறைந்தபாடில்லை.
இந்த நிலையில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் சென்னை நொளம்பூரைச் சேர்ந்த பொறியாளர் ராதாகிருஷ்ணன் சில கருவிகளைக் கண்டுபிடித்துள்ளார். அதாவது வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் மீது மர்ம நபர்கள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினால், அதுகுறித்து எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவியைக் கைக்கடிகார வடிவில் வடிவமைத்துள்ளார்.
யாரெனும் தாக்கும்போது அந்தக் கருவியை அழுத்தினால், காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என அலறல் ஒலி எழுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு போன்ற வழிப்பறி சம்பவங்களிலிருந்து தற்காத்துக்கொள்ள இடுப்பில் கட்டும் பெல்ட் ஒன்றை வடிவமைத்துள்ளார்.
மேலும், வாகனத்தில் செல்லும்போது நடைபெறும் கொள்ளை சம்பவங்களில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் இருசக்கர வாகனத்தில் பொருத்தும் கருவியையும் ராதாகிருஷ்ணன் உருவாக்கவுள்ளார்.
இந்தக் கருவி மூலம் காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளதாகவும் இதற்குக் காவல் துறையினர் அனுமதி வழங்க வேண்டும் என்றும் ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக