முனைவர் ஒய்.ஸ்ரீனிவாச ராவ்
இந்துத்துவ ஆட்சியில் தலித்துகள் - 4
தேசிய ஜனநாயக முன்னணியின் ஆட்சியின் முதல் இரு ஆண்டுகளில் தலித்துகளின் அடையாளச் சின்னங்களைக் கைப்பற்றிக்கொள்வதற்கான முயற்சி ஆதிக்கம் செலுத்தியது. அடுத்த இரு ஆண்டுகளுக்கு தலித்துகள் மீதான தாக்குதல்கள் ஆதிக்கம் செலுத்தியன. தலித்துகள் மீதும் அவர்கள் வரலாற்றின் மீதும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட அரசியல் சட்டரீதியான உத்தரவாதங்கள் மீதும் நான்கு முக்கிய தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன:
நான்கு தாக்குதல்கள்
உனா சவுக்கடி சம்பவம், பீம் - கோரேகாவோன் தாக்குதல்கள், எஸ்சி / எஸ்டி (வன்கொடுமைத் தடுப்பு) சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வது, பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் இட ஒதுக்கீட்டைக் குறைப்பது பற்றிய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் 5 மார்ச் 2019 தேதியிட்ட சுற்றறிக்கை ஆகியவையே அந்த நான்கு தாக்குதல்கள்.
இந்த நான்குமே சாதி இந்து வலதுசாரி சக்திகளின் வலிமையைக் காட்டவும் தலித்துகளை நாடிபிடித்துப் பார்க்கவும் இறுதியாக அவர்களை அடிபணிய வைக்கவும் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட தாக்குதல்கள். வலதுசாரிகள் வியக்குமளவுக்கு இந்த நான்கு தாக்குதல்களையும் தலித்துகள் ஜனநாயக மக்கள் இயக்கங்கள் வாயிலாக எதிர்கொண்டனர். உனா சவுக்கடி சம்பவம் மாபெரும் அகில இந்திய இயக்கத்துக்கு வழிவகுத்து ஜிக்னேஷ் மேவானி தலைமையிலான உரிமைகளுக்கான இயக்கமாகப் பரிணமித்தது. தலித்துகளுக்குக் கிடைக்க வேண்டிய சாத்தியமான ஒவ்வோர் உரிமையையும் கோரும் இயக்கமாக மாறியது.
இறந்த கால்நடைகளின் உடல்களை அப்புறப்படுத்துவது, மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவது போன்ற வேலைகளிலிருந்து விடுவிக்கும்படியும் நில உரிமைகளையும் மாற்று வேலைவாய்ப்பையும் அடிப்படையில் கௌரவமான வாழ்க்கையையும் அந்த இயக்கம் கோரியது. 2016, ஜூலை 31 அன்று, அகமதாபாத்தில் நடைபெற்ற தலித் மகா மாநாட்டில் மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு எதிராக வலுவானதோர் முடிவெடுத்து உனா சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய உனா தலித் அடக்குமுறை போராட்ட சமிதியை அமைத்தனர். ஜிக்னேஷ் மேவானி, ராஷ்ட்ரிய தலித் அதிகார் மஞ்ச் (தேசிய தலித் உரிமைகள் மன்றம்) என்ற ஒரு புது அமைப்பை உருவாக்கி சுயேச்சை வேட்பாளராகத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.
தலித்துகளின் நினைவுச் சின்னம்
2018 ஜனவரி 1 அன்று பீம் கோரேகாவோன் சம்பவத்தின் 200ஆவது ஆண்டு விழா கொண்டாட்டங்களின் மீது மராத்தா தலைவர்களால் தூண்டிவிடப்பட்டுத் தாக்குதல் நடைபெற்றது. தலித்துகள் மீது மராத்தாக்களும் போலீஸாரும் தாக்குதல் நடத்தினர். ஒரு தலித் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்தனர். வீடுகள் கொளுத்தப்பட்டன. சொத்துகள் நாசப்படுத்தப்பட்டன. இந்தச் சம்பவத்தைக் கண்டு இது பற்றி ஒரு வழக்குப் பதிவு செய்தார் என்பதற்காக தலித் பெண் ஒருவர் கொலை செய்யப்படுமளவுக்கு இந்தத் தாக்குதல் சென்றது.
1818 ஜனவரி 1 அன்று பீம் கோரேகாவோனில் தலித்துக்களைக் கொண்ட மஹார் படைப் பிரிவு பிரிட்டிஷ் கிழக்கு இந்தியக் கம்பெனியின் கீழ் போரிட்டு 1 ஜனவரி 1818 அன்று நடைபெற்ற போரில் பேஷ்வா பாஜி ராவ் II அவர்களைத் தோற்கடித்தது. 1925இல் இங்கு அம்பேத்கர் விஜயம் செய்ததை அடுத்து அது தலித்துகளின் வீரத்திற்கும் உறுதிக்கும் நினைவுச் சின்னமாக மாறி வரலாற்று ரீதியான மற்றும் அரசியல் ரீதியான முக்கியத்துவத்தைப் பெற்றது. தலித்துகள் பீம் - கோரேகாவோனில் கிழக்கு இந்தியக் கம்பெனி எழுப்பிய விஜய ஸ்தம்பத்தை (தூணை) இந்நாளில் சென்று கண்டுவருவது நீண்ட காலமாக வழக்கம். அவர்கள் தீவிரமான பிரச்சினைகளை எப்போதுமே எதிர்கொண்டதில்லை.
தலித் வரலாற்றையும் பெருமையையும் வீரத்தையும் கொண்டாடுவது தேசம், தேசியம் குறித்த வலதுசாரிகளின் கருத்துகளோடு மோதியது. இத்தாக்குதல் மாநிலம் தழுவிய பந்த் ஒன்றால் எதிர்கொள்ளப்பட்டது. ஜனவரி 4 அன்று அம்பேத்கரின் கொள்ளுப்பேரனும் பாரிபா பகுஜன் மஹாசங் என்ற தலித் கட்சியின் தலைவருமான பிரகாஷ் அம்பேத்கர் அமைதியான மகாராஷ்டிரா பந்த்துக்கு அறைகூவல் விடுத்தார்.
ஏப்ரல் 2 அன்று நடந்த பாரத் பந்த் பாஜக அரசாங்கம் ஷெட்யூல்ட் சாதியினர் மற்றும் ஷெட்யூல்ட் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டம் 1986 மீது முன்பு எப்போதும் இல்லாத அளவில் தொடுத்த தாக்குதலுக்கு எதிராக முன்பு எப்போதும் இல்லாத அளவிலான எதிர்ப்பாகும்.
இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்து
ஆர்எஸ்எஸ் இட ஒதுக்கீட்டைக்கூட இலக்கிட்டது. 2015இல் மோகன் பாகவத் இட ஒதுக்கீட்டுக் கொள்கை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டுமெனக் கோரினார். இந்தியாவில் பின்னடைந்த சாதிகள் இல்லாதபடியால் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்குத் தேவை இல்லை என எம்.ஜி. வைத்யா வாதிட்டார். அது பத்தாண்டுகளுக்குத் தொடரப்படலாம், பின்னர் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றார். எப்போது வரை தேவையோ அப்போது வரைதான் இட ஒதுக்கீடு இருக்கலாம் என சுரேஷ் பையாஜி கூறியபோது இந்த ஆர்எஸ்எஸ் மனப்பான்மை அம்பலப்பட்டுவிட்டது.
ஆர்எஸ்எஸ் 1981ஆம் ஆண்டில் தனது அகில இந்திய பிரதிநிதி சபையிலும் 1985இல் அகில இந்திய கார்யகாரி மண்டல் கூட்டத்திலும் இட ஒதுக்கீடு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டுமெனக் கோரியது. இதுதான் அவர்களது நிலைப்பாடு. தங்கள் வழித்தோன்றலான பாஜக அதிகாரத்திலிருப்பதால் அவர்கள் தங்கள் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டிவந்தது.
இது மட்டுமல்ல; மதச்சார்பின்மை எதிர்ப்பு, அரசியல் சட்ட எதிர்ப்பு, அம்பேத்கர் எதிர்ப்பு ஆரவாரங்கள் எங்கும் சூழ்ந்துள்ளன. மத்திய சட்ட அமைச்சர் என்ற வகையில் ரவிசங்கர் பிரசாத் அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டுமென்ற விவாதத்தைத் துவக்கிவைத்தார். மதச்சார்பின்மை என்ற சொல்லை மாற்ற வேண்டுமென்ற விவாதம் அது. இந்து ராஷ்டிரத்தை உருவாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளைக் கொண்டவர்களுக்கு மதச்சார்பின்மை என்ற சொல் நிச்சயம் தடைக்கல்லாக விளங்கும். மதச்சார்பின்மை இந்து கலாச்சாரத்தில் (இந்தியக் கலாச்சாரத்தில் அல்ல) உள்ளார்ந்து இருக்கிறது என்ற காரணத்தால் 1976 வரை அது அரசியல் சட்ட முகப்பு உரையில் சேர்க்கப்படவில்லை என வாதிடும் அதே நேரத்தில் ரவிசங்கர் பிரசாத்தின் உண்மையான நோக்கம் இந்து ராஷ்டிரத்திற்கு ஏதுவாக இருக்கும் வண்ணம் இந்து மத நூல்களிலிருந்து சட்டம் குறித்த கருத்துகளைக் கடன் வாங்கி அரசியல் சட்டத்தைத் திருத்துவதாகும்.
இந்திய அரசியல் சட்டத்தின் பல்வேறு அத்தியாயங்களுக்கு சாந்திநிகேதனைச் சேர்ந்த நந்தலால் போஸ் வரைந்த சித்திரங்களைக் காட்டுமளவுக்கு அவர் சென்றார். போஸ் இந்தியாவில் நிலவும் அனைத்து மதங்கள் மற்றும் கலாச்சாரங்கள் ஆகியவற்றிடமிருந்து கருத்துகளைக் கடன்வாங்கி இருந்தார். ஆனால் ரவிசங்கர் பிரசாத்தோ சில புராதன இந்து ஏடுகளிலிருந்து சட்டம் குறித்த விஷயங்கள் அரசியல் சட்டத்தில் சேர்க்கப்படுவதில் தவறில்லை எனச் சுட்டிக்காட்ட ராமாயணத்திலிருந்தும் மகாபாரதத்திலிருந்தும் பெறப்பட்ட சித்திரங்களை மட்டும் சுட்டிக்காட்டினார். இந்தத் தந்திரங்கள் அரசியல் சட்டத்தைக் காவிமயமாக்குவதற்கானவை. இது அம்பேத்கரின் மாபெரும் சாதனை மீதான தாக்குதலாக இருப்பதால் தலித்துகள் இதை மிகவும் சீரியஸாக எடுத்துக்கொள்வார்கள்.
ஆக, மத்தியில் அவர்களின் நான்கு ஆண்டு ஆட்சிக்குள் தலித்துகள் சம்பந்தப்பட்ட ஒன்றைக்கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. இந்த நான்கு ஆண்டுகள் நாட்டில் இந்துத்துவா ஆட்சியினால் தலித்துகளுக்கு ஏற்படக்கூடிய ஆபத்தைச் சந்தேகத்துக்கிடமின்றி வெளிப்படுத்தியுள்ளன.
அடிக் குறிப்புகள்
[i] முஹம்மது பைசல், "பாஜக தலித் எம்.பி.க்கள் ஏன் கட்சித் தலைமைக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்", தி வயர், 7 ஏப்ரல் 2018.
[ii] விஜு கிருஷ்ணன், "உனா தலித் போராட்டங்களும் அதன் எதிர் கால விளைவுகளும்", Peoples Democracy, Vol. XLII, No. 19. May 13, 2018.
[iii] சியாமளா யாதவா, "ஆர்எஸ்எஸ் இடஒதுக்கீடு பற்றிய தன் நிலையை மாற்றிக்கொண்டது ஏன்? இந்தியன் எக்ஸ்பிரஸ், 3 நவம்பர் 2015.
கட்டுரையாளர் முனைவர் ஒய்.ஸ்ரீனிவாச ராவ், துணைப் பேராசிரியர், வரலாற்றுத் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக