சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று (ஜூன் 14) ரூ.22 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரில் இருந்து ஜகதல்பூருக்கு முதல் விமானச் சேவையை தொடங்கி வைத்துப் பேசிய அவர், “ஸ்தர் பகுதி என்றாலே குண்டுகளும், துப்பாக்கிகளும் நிறைந்த பகுதி என்ற நிலைமாறி, விமான சேவைக்கு வழிவகுத்து இருக்கிறோம். அனைத்து வடிவிலான வன்முறைக்கும் வளர்ச்சி மட்டுமே ஒரே மற்றும் சிறந்த பதில் என்பதை நான் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.
இந்தப் பகுதியில் முந்தைய அரசுகள் சாலை அமைக்கவே நடவடிக்கை எடுக்காத நிலையில், பாஜக அரசு, விமான நிலையத்தை அமைத்துள்ளது என்று பெருமையாகக் குறிப்பிட்ட மோடி, “முன்னர் ராய்பூரில் இருந்து ஜக்தல்பூர் செல்ல 6 முதல் 7 மணி நேரம் வரை ஆகும். தற்போது இதை 40 நிமிடங்களாகக் குறைத்துள்ளோம். இதற்கு முன் ராய்ப்பூரில் நாள் ஒன்றுக்கு ஆறு விமானங்கள் மட்டுமே வந்தன. ஆனால், இப்போது, 50 விமானங்கள் வரை வந்து செல்கின்றன. போக்குவரத்து வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது தொழில்துறையை ஈர்க்கும். அதனால், வேலைவாய்ப்பு உருவாகும்.
சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் இங்கு ஐஐடி கல்வி நிலையம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். அதன்படி, நாங்கள் பிலாய் நகரில் ஐஐடி கல்வி நிலையத்தை அமைத்திருக்கிறோம். சத்தீஸ்கர் என்றாலே வனப்பகுதி, பழங்குடி மக்கள் என்ற நிலையை மாற்றி, ஸ்மார்ட் சிட்டிக்கும் பெயரெடுத்த நகரங்களாக மாற்றிவிட்டோம். நாட்டின் முதல் கிரீன் ஸ்மார்ட் சிட்டி உருவாக்கி இருக்கிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக