வாஜ்பாய் உடல்நிலை பாதிப்பு தலைவர்கள் வருகை - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

வாஜ்பாய் உடல்நிலை பாதிப்பு தலைவர்கள் வருகை

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு சிறுநீர் பாதை தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று (ஜூன் 11) டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். இது வழக்கமாக நடைபெறும் மருத்துவப் பரிசோதனைதான் என்றும், வாஜ்பாய் நலமாக உள்ளார் என்றும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா மேற்பார்வையில் உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், பரிசோதனை முடிந்த பிறகு அவர் விரைவில் வீடு திரும்புவார் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை நேற்றிவு மீண்டும் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வாஜ்பாய்க்குப் பரிசோதனை செய்ததில் அவருக்கு சிறுநீர் பாதை தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. எனவே அதற்குரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவருகின்றன. அவரது உடல்நிலையை மருத்துவக் குழு தீவிரமாகக் கண்காணித்துவருகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேற்றிரவு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு வாஜ்பாயைச் சந்தித்து நலம் விசாரித்தார். 50 நிமிடங்கள் வரை அங்கிருந்த பிரதமர், வாஜ்பாயின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடமும் மருத்துவர்களிடமும் கேட்டறிந்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி, தலைவர் அமித் ஷா உள்ளிட்டோரும் வாஜ்பாயைச் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர்.

வாஜ்பாய் உடல்நிலை குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், “வாஜ்பாயின் ஒரு சிறுநீரகம் மற்றும் நுரையீரலின் செயல்பாட்டுத் திறம் மிகவும் குறைந்திருப்பதால் அவரது உடல்நிலை மோசமாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்களில் விசாரித்தபோது இந்த தகவல் கிடைத்ததாக டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

வாஜ்பாய் ஏற்கனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே செயல்பாட்டில் இருந்துவருகிறது. 2009ஆம் ஆண்டு அவருக்குப் பக்கவாதம் ஏற்பட்ட நிலையில், அவரது நினைவாற்றல் திறன் பாதிக்கப்பட்டது. மேலும் டிமென்ஷியா (மனச்சோர்வினால் ஏற்படும் மறதி) நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார். வாஜ்பாய்க்கு எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரந்தீப் குலேரியாதான் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாகக் குடும்ப மருத்துவராக இருந்துவருகிறார்.

இன்று எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, வாஜ்பாய் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வாஜ்பாய் உடல்நிலை குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை. அவர் நல்ல உடல்நலத்துடன் உள்ளார்" என்று குறிப்பிட்டார்.

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை குறித்த தகவல் கவலையளிக்கிறது. அவரது விரைவில் குணமடைய நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்று மூன்றாவது முறையாக அறிக்கை வெளியிட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, "வாஜ்பாய் உடல்நிலை சீராக உள்ளது. ஊசி மூலம் செலுத்தப்படும் ஆண்டிபயாடிக்குகளுக்கு அவரது உடல் எதிர்வினையாற்றுகிறது. அவரது உறுப்புகள் சீராக இயங்குகின்றன. நோய் தொற்று கட்டுப்படுத்தபடும் வரை அவர் மருத்துவமனையில் இருப்பார்" என்று குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here