மருத்துவப் படிப்பில் விளையாட்டுப் பிரிவினருக்கான இட ஒதுக்கீடு மூன்றிலிருந்து ஏழாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக விளையாட்டுப் பிரிவினருக்கு பிடிஎஸ் பிரிவிலும் ஒரு சீட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு அரசு ஒதுக்கீட்டின் கீழ் இருந்த மொத்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 1,200-க்கும் குறைவாக இருந்தது. அப்போது, மாநில அரசு விளையாட்டுப் பிரிவினருக்கு 0.25 சதவிகிதம் மட்டுமே ஒதுக்கீடு செய்தது. அதன்படி, அவர்களுக்கு மூன்று இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. சதவிகித முறையை பின்பற்றாமல், 2017 ஆம் ஆண்டு வரை அரசு எண்ணிக்கை அடிப்படையில் மட்டுமே இடங்கள் ஒதுக்கி வந்தன. தேர்வுக்குழு அளித்த தகவலின்படி, தற்போது மருத்துவப் படிப்பில் விளையாட்டுப் பிரிவினருக்கான இட ஒதுக்கீடு மூன்றிலிருந்து ஏழாக அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா, சிறப்பு விளையாட்டு வீரர்கள் இட ஒதுக்கீட்டை பெறும் வகையில், விளையாட்டை வகைப்படுத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்தினார். மேலும், ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கு மட்டும் விளையாட்டு இட ஒதுக்கீடு பிரிவின் கீழ் தனியாக ஒதுக்கீடு அளித்தால்,உண்மையான விளையாட்டு வீரர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என கூறினார்.
கேரளா,கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் உள்ளதுபோன்று, தமிழகத்திலும் விளையாட்டுப் பிரிவினருக்கு ஐந்து சதவிகித இட ஓதுக்கீடு வழங்க வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் (ஜூன் 11) விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் உள்ள இடங்களில் 15 சதவிகிதம் அகில இந்திய மாணவர்களுக்கான ஒதுக்கீடு. மீதம் 2,594 இடங்கள் உள்ளன. 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 200 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள் 30 போக, மீதம் 170 இடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக