டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் வீட்டிற்கு நேற்றிரவு சென்ற அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி அமைச்சர்கள், அவரது காத்திருப்பு அறையில் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை, இங்கிருந்து அகலப்போவதில்லை என அவர்கள் அறிவித்துள்ளனர். இன்று காலை வரை, அவர்களை அனில் பைஜால் சந்திக்கவில்லை.
கடந்த பிப்ரவரி 19ஆம் தேதியன்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார் அம்மாநில தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷ். அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட எம்எல்ஏக்கள் அமானத்துல்லா கான் மற்றும் பிரகாஷ் ஜர்வால் ஆகியோர் தன்னைத் தாக்கியதாக, துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலிடம் அவர் புகார் அளித்தார். இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் எம்எல்ஏக்கள் இருவரையும் கைது செய்தனர் டெல்லி போலீசார். இதுகுறித்து விசாரணை நடந்துவருகிறது. இந்த விவகாரத்தில், உடனடியாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் போலீசார் தாமதித்து வருவதாகக் கூறி வருகிறது ஆம் ஆத்மி கட்சி.
அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்ட விவகாரத்தையடுத்து, டெல்லி மாநில அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் போராட்டம் நடத்துவதென முடிவு செய்தனர் அங்குள்ள ஐஏஎஸ் அதிகாரிகள். பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கி, இப்போது வரை இந்த போராட்டம் தொடர்கிறது. இதனால், டெல்லி மக்களுக்கான நலத்திட்டங்கள் எதையும் செயல்படுத்த முடியவில்லை என்று ஆம் ஆத்மி அரசு குற்றம்சாட்டி வருகிறது.
ஐஏஎஸ் அதிகாரிகள் சட்டப்படி போராட்டத்தில் ஈடுபட முடியாதென்றும், அவர்கள் எந்தவித கோரிக்கையையும் இதுவரை வலியுறுத்தவில்லையென்றும், இந்த போராட்டத்தின் பின்னணியில் துணைநிலை ஆளுநர் அலுவலகத்தின் அழுத்தம் இருப்பதாகச் சில அதிகாரிகள் தன்னிடம் தெரிவித்ததாகவும் கெஜ்ரிவால் ஏற்கனவே கூறியிருந்தார்.
நேற்று (ஜூன் 12) டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்த தீர்மானம், அங்குள்ள சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ரேஷன் பொருட்களை மக்களின் வீடுகளுக்குச் சென்று விநியோகிக்கும் திட்டமும் தொடங்கப்படுமென அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கு ஒப்புதல் அளிக்காமல் ஐஏஎஸ் அதிகாரிகள் தவிர்ப்பதாகக் குற்றம்சாட்டியது ஆம் ஆத்மி கட்சி. இதனையடுத்து, ஆம் ஆத்மி அமைச்சரவையில் இடம்பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால், மனீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் மற்றும் கோபால் ராய் ஆகியோர், நேற்று மாலை அனில் பைஜால் வீட்டுக்குச் சென்றனர். ஐஏஎஸ் அதிகாரிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அவரிடம் கடிதம் அளித்தனர். ஆனால், அவர்களது கோரிக்கைகளை அமல்படுத்த அவர் மறுத்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, துணைநிலை ஆளுநரின் காத்திருப்பு அறைக்குச் சென்ற கெஜ்ரிவாலும் அவரது சகாக்களும், அங்கு காத்திருப்புப் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். “துணை நிலை ஆளுநர் நடவடிக்கை ஏதும் எடுக்கமுடியாது என்று தெரிவித்துள்ளார். அரசியலமைப்புச்சட்டப்படி துணைநிலை ஆளுநர் செயல்படவேண்டும். எங்களது கோரிக்கைகள் ஏற்கப்படாதவரை, இங்கிருந்து அகல மாட்டோம் என்று அவரிடம் தன்மையாக எடுத்துரைத்தோம். அவரது அறையில் இருந்து வெளியே வந்து, காத்திருப்பு அறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் கெஜ்ரிவால். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக 4 மாதங்களுக்கும் மேலாக ஐஏஎஸ் அதிகாரிகள் போராட்டம் தொடர்வதாகவும், அது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
கெஜ்ரிவால் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் சிலர், அனில் பைஜாலின் வீட்டுக்கு வெளியே உட்கார்ந்து போராட்டம் நடத்தினர். நள்ளிரவில் அவர்கள் கலைந்து சென்றனர். ஆனால், அரவிந்த் கெஜ்ரிவாலும் அவரது சகாக்களூம் அங்கேயே தூங்கி எழுந்தனர். இன்றும் அவர்கள் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். குறிப்பாக, அமைச்சர் சத்யேந்திர ஜெயின் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். இதற்கு, மற்ற மாநிலங்களைச் சார்ந்த கட்சிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டுமென சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர் ஆம் ஆத்மி கட்சியினர்.
ஐஏஎஸ் அதிகாரிகளின் போராட்டத்தை முடிவுக்குக்கொண்டுவர சம்பந்தப்பட்ட அமைச்சரின் சார்பாகப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இது தொடர்பாக கடந்த நான்கு மாதங்களில் எட்டு முறை ஆளுநர் அனில் பைஜாலை ஆம் ஆத்மி அமைச்சர்கள் சந்தித்ததாகவும் அக்கட்சி தகவல் வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக