சிங்கப்பூரின் சென்டோசா தீவில், இன்று (ஜூன் 12) காலை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் வுன் இடையிலான வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சந்திப்பு நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் கையெழுதிட்ட இருவரும், இந்த சந்திப்பில் திருப்தி கொள்வதாகத் தெரிவித்தனர்.
வடகொரிய அதிபர் கிம் ஜோங் வுன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இடையிலான சந்திப்பு, இன்று சிங்கப்பூர் நாட்டின் சென்டோசா தீவிலுள்ள கெபல்லா ஹோட்டலில் நடைபெற்றது. பாதுகாப்புப்படையினர் புடைசூழ, இருநாட்டு அதிபர்களும் அடுத்தடுத்து வந்தனர். கிம்முடன் அவரது சகோதரி கிம் ஜோ யோங்கும் இந்த சந்திப்புக்கு வந்திருந்தார். இரண்டாவதாக வந்த ட்ரம்பை, அவர் வரவேற்றார். கெபல்லா ஹோட்டலின் வாயிலில், கிம்மும் ட்ரம்பும் கைகுலுக்கிக் கொண்டனர். இது 12 நொடிகள் நீடித்தது.
இருவரும் தனியாகச் சந்திப்பதற்கு முன்பாக, செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, இந்த சந்திப்பு கண்டிப்பாக வெற்றி பெறுமென்றும், இரு நாடுகளுக்கும் இடையே அற்புதமான உறவு உண்டாகுமென்பதில் தனக்கு எந்தச் சந்தேகமும் இல்லையென்றும் தெரிவித்தார் டொனால்டு ட்ரம்ப். இந்த சந்திப்பு நிகழ்வதென்பது எளிதான செயலல்ல என்றும், கடந்த காலத் தடைகளைத் தாண்டி தாங்கள் இருவரும் சந்தித்திருப்பதாகவும் கூறினார் கிம் ஜோங் வுன். பால்கனியில் நின்றவாறே செய்தியாளர்களை நோக்கி இருவரும் கையசைத்தனர். அதன்பின், இருவரும் தனியறையில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, அவர்களது மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமே உடனிருந்தனர். சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக இருவரும் உரையாடினர். இதன்பின், தங்களது ஆலோசகர்களுடன் இரு நாட்டு அதிபர்களும் விவாதித்தனர். வடகொரியா மீதான பொருளாதாரத் தடை நீக்கம் மற்றும் அணுஆயுத ஒப்பந்தத்தைப் பின்பற்றுவது குறித்து இருவரும் விவாதித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இருநாட்டு அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது.
மதிய உணவின்போது, வடகொரியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மேலும் சில அதிகாரிகள் கிம் மற்றும் ட்ரம்புடன் இணைந்துகொண்டனர். அதன்பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்தார் ட்ரம்ப். யாரும் எதிர்பாராத வகையில், இருவருக்கும் இடையிலான சந்திப்பு அற்புதமாக அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டார். இதன்பிறகு, ட்ரம்பின் காரைப் பார்வையிட்டார் கிம் ஜோங் வுன்.
மீண்டும் பேச்சுவார்த்தை நடந்த இடத்திற்குத் திரும்பிய ட்ரம்பும் கிம்மும் இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் குறித்த விவரங்களைப் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, இன்னும் சில மணி நேரத்தில் அதுகுறித்து அறிவிப்போம் என்றார் ட்ரம்ப். கடந்த காலத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சந்திப்புக்கு ஒப்புக்கொண்டதற்காக ட்ரம்புக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார் கிம் ஜோங் வுன்.
அதன்பின், இருநாட்டு அதிபர்களும் தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பினர். சிங்கப்பூரில் இருந்து கிளம்பும் முன்பாக, இன்று இரவு செய்தியாளர்களைச் சந்திக்கவிருக்கிறார் டொனால்டு ட்ரம்ப். ட்ரம்ப் – கிம் சந்திப்பினை, தொலைக்காட்சியில் கண்டுகளித்தார் தென்கொரிய அதிபர் மூன் ஜே இல். இருவரது சந்திப்பினை சீன அரசும் பாராட்டியுள்ளது.
இந்த சந்திப்பின் இடையே, ட்ரம்பின் பொருளாதார ஆலோசகர்களில் ஒருவரான லேரி கட்லோவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் சிங்கப்பூர் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக