ஆஃப்கானிஸ்தானுடன் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிவரும் இந்திய அணியில் சுவாரஸ்யமான ஒரு சாதனை நிகழ்ந்திருக்கிறது.
கிரிக்கெட் உலகில் தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுக்கு எதிராக விளையாடி வருகிறது ஆஃப்கானிஸ்தான் அணி. பெங்களூருவில் நடக்கும் இந்தப் போட்டியில் இந்தியா முதலாவதாக பேட்டிங் செய்து விளையாடிவருகிறது.
இந்த நிலையில் இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் பட்டியலில் ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக், முரளி விஜய் என மூன்று தமிழக வீரர்கள் ஒரே நேரத்தில் அணியில் இடம்பிடித்துள்ளனர் என்பதுதான் அந்தச் சாதனை.
1961இல் மும்பையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கிரிபால் சிங், மில்கா சிங், விவி குமார் ஆகிய மூன்று தமிழக வீரர்கள் இதேபோல் இடம்பெற்றார்கள். அதன்பிறகு இந்த டெஸ்ட் போட்டியில்தான் மூன்று தமிழக வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்கள்.
சில மாதங்களுக்கு முன்னர் இந்திய அணி பங்கேற்ற நிடாஹஸ் கோப்பை முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர் என மூன்று தமிழக வீரர்கள் இடம்பெற்றிருந்தார்கள்.
‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ எனப் பெயர் வைத்துவிட்டுத் தமிழ்நாட்டு வீரர்களையே அணியில் அதிகம் பார்க்க முடியாத நிலை, கடந்த ஐபிஎல்லின்போது இருந்தது. அந்தக் குறையைப் போக்கும் விதமாக தற்போது இந்நிகழ்வு அமைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக