2019ஆம் ஆண்டு முதல் நீட் உட்பட அனைத்து போட்டித் தேர்வுகளையும் தேசிய தேர்வு முகமை நடத்தும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இன்று (ஜூன் 12) தெரிவித்துள்ளது.
தேசிய தேர்வு முகமை
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் மேற்பார்வையில் போட்டித் தேர்வுகளை நடத்த தேசிய தேர்வு முகமை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதற்காக முதல் கட்டமாக ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டதாக 2017ஆம் ஆண்டு மத்திய அரசு தெரிவித்திருந்தது.
மாவட்டம்தோறும் தேசிய தேர்வு முகமை அமைக்கப்பட்டு அதன் மூலமே தேர்வுகள் நடத்தப்படும். சிபிஎஸ்இ நடத்தும் அனைத்து தேர்வுகளையும் இனி இந்த அமைப்பு நடத்தும். இது முற்றிலும் தன்னாட்சி பொருந்திய அமைப்பாகச் செயல்படும் என்றும் கூறப்பட்டது.
இந்த அமைப்பு மூலம் போட்டித் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படும். அதன்படி சுமார் 40 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று மத்திய அரசு குறிப்பிட்டிருந்தது.
2019ஆம் ஆண்டு முதல்
இந்நிலையில் 2019ஆம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ மூலம் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளையும் தேசிய தேர்வு முகமை நடத்தும் என்று, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. ஆண்டுதோறும் இருமுறை இதுபோன்ற நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், இணையதளம் மூலம் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நீட், ஜேஇஇ உட்பட அனைத்து போட்டித் தேர்வுகளையும் இனி தேசிய தேர்வு முகமை நடத்தும் என்பது தெரியவந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக