டெல்லி: இந்தியா - சீனா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியை உயர்த்திய அமெரிக்காவிற்கு இந்த இரு நாடுகளும் பதிலடி கொடுத்துள்ளது.
இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி விதிக்கும் விவகாரத்தில் சீனா, இந்தியா போன்ற நாடுகளை அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தங்கள் நாடு குறைவான வரி விதிப்பதாகவும், மற்ற நாடுகளில் அதிகமான வரி விதிக்கப்படுவதாகவும் அந்நாடு குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மீதான வரியை 25 சதவீதம் உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். அமெரிக்காவின் தயாரிப்பு ரகசியங்களை காப்புரிமை விதிகளை மீறி சீனா திருடுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையடுத்து, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான 659 பொருட்களுக்கு 25 சதவீத வரியை உயர்த்தி சீனா பதிலடி கொடுத்துள்ளது. இந்த வரி உயர்வானது ஜூலை 6-ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு, மற்றும் அலுமினியம் மீதான வரியை முறையே 25 சதவீதம், 10 சதவீதம் உயர்த்தி அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களுக்கு 50 சதவீதமும், பாதாம் பருப்பிற்கு 20 சதவீதமும், வால்நட்களுக்கு 20 சதவீதமும், ஆப்பிள்களுக்கு 25 சதவீதமும் வரி விதித்தும் உத்தரவிட்டுள்ளது. இந்த வரி விதிப்பு முறை வருகிற 21-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக