மாநகராட்சியைப் போன்றே, சென்னை மாவட்டத்தின் வருவாய் எல்லைப் பகுதிகளும் விரிவாக்கப்பட உள்ளன.
இந்த விரிவாக்கப்பட்ட சென்னை மாவட்டத்தில் பணிபுரிய காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து அரசு ஊழியர்கள் இடமாற்றத்தின் மூலம் பணியமர்த்தப்பட உள்ளனர்.
சென்னை பெருநகர மாநகராட்சியின் எல்லையானது, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை உள்ளடக்கி இருக்கிறது.
மாநகராட்சியின் எல்லை விரிவாக்கப்பட்டு இருந்தாலும், வருவாய் மாவட்ட எல்லை விரிவாக்கப்படாமல் இருந்தது.
மாநகராட்சியின் எல்லையைப் போன்றே வருவாய் மாவட்ட எல்லையையும் நிர்ணயிக்கும் வகையில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த சில பகுதிகள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட உள்ளன. இதற்கான அரசு உத்தரவு ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் சோழிங்கநல்லூர், ஆலந்தூர் தாலுகாவின் சில கிராமங்கள், திருவள்ளூர் மாவட்டத்தின் மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர், பொன்னேரி ஆகிய தாலுகாக்களின் சில பகுதிகள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட உள்ளன.
*ஐந்து வகைகளில் இடமாற்றம்*
சென்னை மாவட்டத்துடன், பிற மாவட்டங்களின் வருவாய் கிராமங்கள் இணைக்கப்படும் போது, விரிவாக்கப்பட்ட பகுதிகளில் பணியிட மாற்றத்தின் மூலமாக அரசு ஊழியர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.
இந்த பணியிட மாற்றம், ஐந்து வகைகளில் செய்யப்பட உள்ளது. இதற்கான உத்தரவை வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா வெளியிட்டுள்ளார்.
அதன்படி, சென்னை மாவட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து விருப்பத்தின் அடிப்படையிலும் பணியில் சேர்ந்து மிகவும் இளநிலையில் இருக்கக் கூடியவர்களும் பணியிட மாற்றம் செய்யப்படுவர்.
இதேபோன்ற முறையில், காஞ்சிபுரம் மாவட்டப் பணியாளர்களும், விரிவாக்கப்பட்ட சென்னை மாவட்ட நிர்வாகத்தில் பணியமர்த்தப்படுவர் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக