ஆப்பிள் பழங்களுக்கான கட்டணத்தை 50 முதல் 80 விழுக்காடு வரை உயர்த்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளதால் அமெரிக்க ஆப்பிள் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று அமெரிக்காவின் இருகட்சிகளைச் சேர்ந்த செனட் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளை இந்தியா மீறுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஜூன் 21ஆம் தேதிக்குள் ஆப்பிள் மீதான கட்டணத்தை உயர்த்தவிருப்பதாக உலக வர்த்தக அமைப்பில் மே 28ஆம் தேதியன்று இந்தியா அறிவித்திருந்தது. ஸ்டீல் மற்றும் அலுமினியத்துக்கான கட்டணங்களை அமெரிக்கா உயர்த்தியதற்குப் பதிலடி கொடுக்கவே ஆப்பிள் மீதான கட்டணத்தை உயர்த்தப்போவதாக இந்தியா விளக்கமளித்திருந்தது. வாஷிங்டன் மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 12 காங்கிரஸ்காரர்களைக் கொண்ட குழு, அமெரிக்க வணிகப் பிரதிநிதியான ராபர்ட் லிதிசருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “எங்களது பார்வையில், சீனா மற்றும் இதர நாடுகளைப் போல இந்தியாவும் உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளை மீறுகின்றது. இந்நாடுகள் எந்தவொரு அங்கீகாரமும் இல்லாமல் ஒருதலைபட்சமாக பதிலடி கொடுத்து வருகின்றன. இத்தகைய விதிமீறல்களை எதிர்க்குமாறு உங்களை நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.
நடப்புப் பருவத்தில், 77 லட்சத்துக்கும் அதிகமான ஆப்பிள் பெட்டிகள் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு 118.3 மில்லியன் டாலருக்கும் அதிகமாகும். மேலும் இந்தக் கடிதத்தில், “தற்போது இந்தியாவுக்குச் சென்றுகொண்டிருக்கும் சரக்குக் கப்பல்களில், ஆப்பிள் பழங்களைக் கொண்டுள்ள சுமார் பத்து லட்சம் அட்டைப் பெட்டிகள் உள்ளன என்பதாக நாங்கள் அறிகிறோம். இதன் தாக்கம் ரெட் டெலீசியஸ் ரக ஆப்பிள்களை உற்பத்தி செய்பவர்கள் மீது அளவுக்கு மீறி இருக்கும். நடப்புப் பருவத்தில் வாஷிங்டனிலிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆப்பிள் பழங்களில் ரெட் டெலீசியஸ் ஆப்பிள் பழங்கள் 90 விழுக்காடு பங்கு வகிக்கின்றன” என்று கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக