சூரிய சக்திக் கொள்கையின் கீழ் டெல்டா பகுதிகளில் 500, பிற பகுதிகளுக்கு 500என 1,000 சூரிய சக்தி மோட்டார் பம்பு செட்டுகள் 50 கோடி ரூபாய் செலவில் 90 சதவீத மானியத்தில் நிறுவப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சட்டப்பேரவையில் 110விதியின் கீழ் வேளாண் துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன் 14) வெளியிட்டார்.
முதல்வர் பேசுகையில், " பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாகவும், விவசாயப் பெருமக்களின் வளமான வாழ்வுக்கு முக்கியமாக விளங்கும் வேளாண்மை தொழிலை மேம்படுத்துவதற்கும், விவசாயப் பெருமக்களின் வாழ்வு வளம் பெறச் செய்வதற்கும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில், கீழ்க்காணும் அறிவிப்புகளை இம்மாமன்றத்தில் அறிவிக்கின்றேன்" என்று குறிப்பிட்டார்.
முதலாவது அறிவிப்பில், "தமிழ்நாட்டில் அபரிமிதமாகக் கிடைக்கும் சூரிய சக்தியை, பல்வேறு வழிகளில் பயன்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு "சூரிய சக்திக் கொள்கை"" ஒன்றை 2012-ஆம் ஆண்டில் உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. இதுவரை, தமிழ்நாட்டில் 3,112 சூரிய சக்தி பம்ப் செட்டுகளும், 181 சூரிய உலர்ப்பான்களும், 117 கோடியே 24 லட்சம் ரூபாய் மானியத்தில் நிறுவப்பட்டுள்ளன. இலவச மின் இணைப்பை ஏற்கனவே பெற்றுள்ளவர்களும், இலவச மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தவர்களும், மின் இணைப்பை துறப்பதற்கு முன்வந்தால், இத்திட்டத்தின் கீழ், 90 சதவீத மானியத்தில் சூரிய சக்தி மோட்டார் பம்பு செட்டுகள் அமைத்து தரப்படும். தற்போது விவசாயிகளிடையே, சூரிய சக்தி மோட்டார் பம்பு செட்டுகளுக்கு அதிக தேவை இருப்பதை கருத்தில் கொண்டு, ஏற்கனவே டெல்டா மாவட்டங்களுக்கு குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்துடன் அறிவிக்கப்பட்ட 500 சூரிய சக்தி மோட்டார் பம்பு செட்டுகள் போக, டெல்டா மாவட்டங்கள் அல்லாத பிற பகுதிகளுக்கும் 500 சூரிய சக்தி மோட்டார் பம்பு செட்டுகள் என மொத்தம் 1,000 சூரிய சக்தி மோட்டார் பம்பு செட்டுகள் 50 கோடி ரூபாய் செலவில் 90 சதவீத மானியத்தில் நிறுவப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
"சிறுதானியங்களின் தேவை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. எனவே, சிறுதானியப் பயிர்களின் உற்பத்தியை உயர்த்தும் வகையில், விதை உற்பத்தி மற்றும் விநியோகம், தொகுப்பு செயல் விளக்கம், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மற்றும் ஊட்டச் சத்து மேலாண்மை, சிறு தளைகள் விநியோகம் போன்ற பணிகளுக்காக, நடப்பாண்டில் 6 கோடியே 62 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும்" என்ற இரண்டாவது அறிவிப்பில் குறிப்பிட்ட முதல்வர், "வாழை சாகுபடி பரப்பளவில் இந்திய அளவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. வாழை அதிக நீர் தேவைப்படும் பயிராகும். தண்ணீர் பற்றாக்குறையினால், வாழை சாகுபடி பரப்பில் குறைவு ஏற்படக்கூடாது என்பதற்காக, வாழை சாகுபடியில் சிக்கன நீர் மேலாண்மைக்காக நடப்பாண்டில் வாழை சாகுபடி மேற்கொள்ளப்படும் 10,000 ஏக்கர் பரப்பளவில் நுண்ணீர்ப் பாசன முறையினை அமைப்பதற்கு விவசாயிகளுக்கு மானியமாக 27 கோடியே 83 லட்சம் ரூபாய் வழங்கப்படும்" என்றும் அறிவித்தார்.
மேலும், உயர் தொழில் நுட்பங்களை கடைபிடித்தல் மூலம் தரமான உற்பத்தி உறுதி செய்யப்படுகிறது. காய்கறிகளை பசுமைக்குடில், நிழல் வலைக்குடில் போன்ற பாதுகாக்கப்பட்ட சூழலில் பயிரிடுதல், ஏறுகொடிகள் மற்றும் பற்று கொடிகளான காய்கறி மற்றும் பழங்களுக்கு ஆதாரமாக பந்தல் அமைத்தல், நிலப்போர்வை அமைத்தல் போன்ற தொழில்நுட்பங்களை மேற்கொள்ள 10 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்" என்றும் முதல்வர் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக