ரயில் பயணத்திற்கு டிக்கெட் பதிவு செய்ய புதிய விதிகளை விதித்துள்ளது ஐஆர்சிடிசி.
இந்திய ரயில்வேயால் இயக்கப்படும் ரயில்களில் தினமும் 2 கோடியே 30 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். டிக்கெட் முன்பதிவின்போது, இருக்கை அல்லது படுக்கை வசதி இருப்பு நிலை, காத்திருப்பு எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை ஐஆர்சிடிசி இணையதளத்தில் வெளிப்படையாகக் காணலாம். இந்த நிலையில், பயணிகளின் பல்வேறு கோரிக்கைகளை ஏற்று, அவர்களுக்கு உதவுவதற்காக ஐஆர்சிடிசி இணையதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆதார் கார்டு சரிபார்க்கப்பட்ட பயனாளர் ஒவ்வொரு மாதமும் 12 டிக்கெட்டுகள் வரை பதிவு செய்யலாம் மற்றும் பயணிகள் மூன்று மணி நேரத்துக்குள் புறப்படும் பயணத்தைத் தொடர முடியாவிட்டால் பயணிகளின் பணத்தைத் திரும்பப் பெறலாம்.
மேலும், குறிப்பிடப்பட்டுள்ள சில விதிகள்:
1. பயணிகள் டிக்கெட் முன்பதிவை 120 நாட்களுக்கு முன்பாகவே பதிவு செய்ய முடியும். ஒரு மாதத்திற்கு ஒரு பயனாளர் ஐடியிலிருந்து ஆறு டிக்கெட்டுகள் வரை பதிவு செய்ய முடியும். மேலும், ஆதார் கார்டு இணைக்கப்பட்டிருந்தால் 12 டிக்கெட் வரை பதிவு செய்ய முடியும். காலை 8 மணி முதல் 10 மணி வரை அதிகபட்சமாக ஒரு ஐடியில் இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே பதிவு செய்யலாம்.
2. தட்கல் வசதியில் பதிவு செய்பவர்கள் ஏ.சி. பெட்டிகளுக்குக் காலை 10 மணி முதலாகவும், ஸ்லீப்பர் பெட்டிகளுக்குக் காலை 11 மணி முதலாகவும் முதல் நாளே பதிவு செய்யலாம்.
3. ஒரு பயனாளர் ஐடியிலிருந்து, இரண்டு தட்கல் டிக்கெட்டுகளை மட்டுமே பதிவு செய்ய முடியும். இதற்கான கால நேரம்: காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை.
4. தட்கல் முன்பதிவுகளின்போது, ஆறு படுக்கை / இருக்கைகளை அதிகபட்சமாக ஒரு குறிப்பிட்ட பயணத்திற்காகப் பதிவு செய்ய முடியும். இதற்கு, ரயில் கடக்கும் தொலைவின் அடிப்படையில் கட்டுப்பாடுகள் உண்டு.
5. ஓர் அமர்வில், ஒரே ஒரு தட்கல் டிக்கெட்டை மட்டுமே பதிவு செய்யலாம். (திரும்பும் பயணம் தவிர).
6. காலை 8 மணி முதல் 12 மணி வரை ஒரு பக்கத்தில் (tab) பதிவு செய்வதற்கான சேவைகளும், விரைவுப் பதிவு சேவைகளும் வழங்கப்படாது. ஒரு பயனர் ஒரே நேரத்தில் ஒருமுறை மட்டுமே தனது ஐடியில் நுழைந்து சேவைகளைப் பெற முடியும்.
7. காலை 8 மணி முதல் இரவு 8.30 மணி வரை காலை 10 மணி முதல் 10.30 மணி வரை காலை 11 மணி முதல் 11.30 மணி வரை ஏஜண்டுகள் டிக்கெட் பதிவு செய்ய அனுமதிக்கப்படும். ஆன்லைன் முன்பதிவு துவங்கிய பிறகு முதல் 30 நிமிடங்களில், அங்கீகாரம் பெற்ற டிராவல் ஏஜெண்டுகள் தட்கல் டிக்கெட்டுகளைப் பதிவு செய்ய முடியாது. இது, ஒரு குறுகிய கால இடைவெளியில் பல டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதிலிருந்து தடுத்து, பயணிகள் தங்களது டிக்கெட் பதிவு செய்வதற்கான நேரத்தை அளிக்கிறது.
8. ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுக்கான நேரங்களில் கட்டுப்பாடுகள் உள்ளன. பயணிகள் தங்களது விவரங்களைப் பூர்த்தி செய்வதற்கு 25 விநாடிகள் மட்டுமே வழங்கப்படுகிறது. பயணிகள் விவரங்கள் பக்கம் மற்றும் கட்டணப் பக்கத்தில் கேப்ட்சாவைப் (Captcha) பூர்த்தி செய்வதற்குக் குறைந்தபட்சமாக 5 விநாடிகள் மட்டுமே வழங்கப்படுகிறது.
9. ஆன்லைன் வங்கிச் சேவைகள் வாயிலாகப் பணம் செலுத்துவதற்கு, அனைத்து வங்கிகளின் சந்தாதாரர்களும் தங்களது ஒரு முறை கடவுச் சொல்லை (OTP- one-time password) சரி பார்க்க வேண்டும்.
10. இனி, பயணிகள் செலுத்தியப் பணத்தை (Refund) திரும்பப் பெறலாம். அதற்கான காரணங்கள்:
* திட்டமிடப்பட்ட நேரத்திலிருந்து மூன்று மணி நேரத்திற்குள் ரயில் புறப்படாவிட்டால்.
* ரயில் பயணிக்க வேண்டிய பாதையிலிருந்து திசை திருப்பி விட்டால், அவர் அந்த வழியில் பயணம் செய்ய விரும்பாவிட்டால்.
* ஒரு பயணி பதிவு செய்திருந்த வகுப்பை விடக் குறைவான வகுப்புகளுக்கு இருக்கை / படுக்கை மாற்றப்பட்டிருந்தால், அவர் அந்த மாற்றப்பட்ட வகுப்பில் பயணிக்க விரும்பவில்லை என்றால் அவருக்குப் பணம் திரும்பச் செலுத்தப்படும். மாற்றப்பட்ட வகுப்பில் அவர் பயணிக்க விரும்பினால், அதற்கான கட்டண வேறுபாடு அவருக்குத் திரும்பச் செலுத்தப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக