சர்வதேச யோகா தினம் நேற்று (ஜூன் 21) கொண்டாடப்பட்டதையொட்டி, சூரிநாம் நாட்டின் குடியரசுத் தலைவர் டெலனோ பூட்டர்ஷ் உடன் இணைந்து யோகா பயிற்சிகள் செய்தார் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாகக் கொண்டாடுவதாக, கடந்த 2015ஆம் ஆண்டு அறிவித்தது ஐக்கிய நாடுகள் சபை. பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. நேற்று (ஜூன் 21) சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு டேராடூனில் நடந்த விழாவில் கலந்துகொண்டார் பிரதமர் மோடி. மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட பல அமைச்சர்கள் மாநிலத் தலைநகரங்களில் நடந்த யோகா தின கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.
மூன்று நாட்களுக்கு முன்பாக கிரீஸ், சூரிநாம், கியூபா நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். ஜூன் 19 அன்று அவர் சூரிநாம் நாட்டுக்குச் சென்றார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நேற்று (ஜூன் 21) சூரிநாம் தலைநகர் பராமரிபோவில் நடந்த விழாவில் கலந்துகொண்டார் ராம்நாத் கோவிந்த். அந்நாட்டு குடியரசுத் தலைவர் டெலனோ பூட்டர்ஷ் உடன் இணைந்து, அவர் யோகா பயிற்சிகள் செய்தார்.
இதுகுறித்து, ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பூட்டர்ஷ் உடன் இணைந்து யோகா செய்ததில் மகிழ்ச்சியடைவதாகவும், யோகா தினத்தன்று இரு நாட்டுக் குடியரசு தலைவர்கள் இணைந்து யோகா பயிற்சி செய்வது இதுவே முதன்முறை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார் ராம்நாத். “இந்தியர்களின் பாரம்பரியம் யோகா. ஆனால், இது இந்தியர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. மனித குலம் அனைத்துக்கும் சொந்தமான பாரம்பரியம் இது. நீங்கள் எங்கிருந்தாலும், யோகாவின் சிறப்பை அறிந்து கொண்டாடலாம்” என்று அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சூரிநாம் நாட்டையடுத்து கியூபாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் ராம்நாத் கோவிந்த்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக