குஜராத் ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள தாரங்கா மலைப் பகுதியில் இந்தியத் தொல்லியல் துறையினர் மேற்கொண்ட ஆய்வில் புத்த மத ஸ்தூபியைக் கண்டுபிடித்துள்ளனர்.
குஜராத்தில் ஆரவல்லி மாவட்டத்தில் உள்ள, தேவ்நீ மோரியில் கி.பி 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, பௌத்த மதத்தின் பழங்காலப் பொருட்களும் ஸ்தூபியும் புத்த விஹார்களும் நீண்ட காலமாக இருந்து வருகின்றன.
இந்த நிலையில், இந்தியத் தொல்லியல் துறையினர் தொடர்ந்து இந்தப் பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டிருந்த நிலையில் தற்போது, ஸ்தூபி, மண் பாண்டம், கலைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது க்ஷத்திரா காலத்தை (1கி.பி - 4கி.பி) சேர்ந்தவை என்று கூறப்படுகிறது. மேலும் ஸ்தூபியானது புத்த ஸ்தூபியைப் போன்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆய்வின் துணைக் கண்காணிப்பாளர் டாக்டர் அபிஜித் அம்பேகர் கூறுகையில் “ஆய்வுப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு சுமார் 8 மீட்டர் விட்டம் கொண்ட சுட்டச் செங்கற்களால் ஆனக் கட்டடம் ஒன்று இருந்தது. அது நான்கு படிகளைக் கொண்டதாக இருந்தது” எனக் கூறினார்.
சமீபத்திய இந்தக் கண்டுபிடிப்புகள், குஜராத்தை முக்கிய பௌத்த தளமாக மாற்றியுள்ளது. மேலும் இந்தியத் தொல்லியல் துறையினர் சமீபத்தில் 50 மீட்டர் நீளம் கொண்ட கி.மு 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டடம் ஒன்றைப் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த ஊரான வாத்நகரில் கண்டுபிடித்தனர். வாத்நகரில் இருந்து தாரங்கா மலைப் பகுதியானது 38 கி.மீ ஆகும். மேலும் மாநிலத் தொல்பொருள் துறையினர், வாத்நகரிலும் பௌத்த கோயில் ஒன்றைச் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக