இந்தியாவின் முன்னணி 12 துறைமுகங்களும் இந்த நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் மொத்தம் 116.26 மில்லியன் டன் அளவிலான சரக்குகளைக் கையாண்டு சாதனைப் படைத்துள்ளன.
காண்ட்லா, மும்பை, ஜே.என்.பி.டி., நியூ மர்முகாவ், கொச்சின், நியூ மங்களூர், சென்னை, எண்ணூர், வ.உ.சிதம்பரனார், விசாகப்பட்டினம், பரதீப் மற்றும் கொல்கத்தா ஆகிய 12 துறைமுகங்களும் இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகங்களாகும். இவை சென்ற ஏப்ரல் - மே மாதங்களில் மொத்தம் 116.26 மில்லியன் டன் அளவிலான சரக்குகளைக் கையாண்டுள்ளன. இது 2016ஆம் ஆண்டின் இதே காலகட்ட அளவைவிட 2.41 விழுக்காடு அதிகமாகும். அதிகபட்சமாக எண்ணூர் துறைமுகம் சரக்குகள் கையாளுதலில் 11.69 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து கொல்கத்தா துறைமுகம் 11.33 விழுக்காடு வளர்ச்சியையும், கொச்சின் துறைமுகம் 8.70 விழுக்காடு வளர்ச்சியையும், பரதீப் துறைமுகம் 7.61 விழுக்காடு வளர்ச்சியையும் , நியூ மங்களூர் துறைமுகம் 6.66 விழுக்காடு வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளன.
சரக்கு வாரியாகப் பார்த்தோமேயானால் பெட்ரோலியம், ஆயில் மற்றும் உயவுப் பொருட்கள் 29.54 விழுக்காடு அளவில் கையாளப்பட்டுள்ளன. கண்டெய்னர் சரக்குகள் 20.36 விழுக்காடு அளவிலும், நிலக்கரி 16.58 விழுக்காடு அளவிலும் கையாளப்பட்டுள்ளன. குறிப்பிடும்படியாக, கொல்கத்தா, பரதீப், விசாகப்பட்டினம், எண்ணூர், சென்னை, கொச்சின், நியூ மங்களூர், ஜே.என்.பி.டி. ஆகிய துறைமுகங்கள் சரக்குகளைக் கையாள்வதில் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன என்று மத்திய கப்பல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக