அரசு கலைக் கல்லூரிகளுக்கு ஆய்வுக்கூட உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்த வழக்கில் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் உள்ளிட்ட ஐந்து பேரின் தண்டனையைச் சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.
அரசு கலைக் கல்லூரிகளில் உள்ள ஆய்வுக்கூடங்களுக்குப் பொருட்கள் கொள்முதல் செய்ய 1995ஆம் ஆண்டு கல்லூரிக் கல்வி ஆணையர் உத்தரவிட்டார்.
அதன்படி தரமற்ற பொருட்கள் கொள்முதல் செய்ததன் மூலம் அரசுக்கு 56 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் காசிநாதன், விழுப்புரம் கூட்டுறவு சங்கத் தனி அதிகாரி பெருமாள், திண்டுக்கல் கூட்டுறவு சங்கத் தலைவர் திருப்பதிராஜ், திருவண்ணாமலை அண்ணாமலையார் கூட்டுறவு சங்கத் தலைவர் கார்மேகம், தனி நபர் கோவிந்தராஜன் ஆகியோர் மீது காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், 2007ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி காசிநாதனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும், மற்ற நான்கு பேருக்கும் தலா ஒராண்டு சிறைத் தண்டனையும் தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. .
இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஐந்து பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2008ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்தனர். இதனிடையே 2009ஆம் ஆண்டு காசிநாதன், 2010ஆம் ஆண்டு பெருமாள் ஆகியோர் மரணமடைந்தனர்.
இந்த வழக்கை நேற்று (ஜூன் 9) விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டார். இறந்த இருவரைத் தவிர மூன்று பேரும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஜூலை 4ஆம் தேதிக்குள் சரணடைய வேண்டும் எனத் தீர்ப்பளித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக